முல்லைத்தீவில் பயன்பாடற்ற நிலையில் சிறுவர் பூங்கா: மக்கள் விசனம்
முல்லைத்தீவு (Mullaitivu) - உண்ணாப்பில பகுதியில் சிறுவர் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு பல வருடங்கள் கடந்த போதும் சிறுவர்கள் பயன்படுத்தாத நிலையில் உள்ளதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முல்லைத்தீவின் கொக்கிளாய் வீதியில் அமைந்துள்ள இந்த பூங்காவின் பயன்பாடு யாருக்காக என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்.
குறித்த பூங்காவானது, கரைத்துறைபற்று பிரதேச சபைக்குரிய ஆளுகையினால் பராமரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ள போதும் அந்த சிறுவர் பூங்கா யாருக்காக அமைக்கப்பட்டது என்ற கேள்விக்குப் பதில் உரிய முறையில் வழங்கப்படவில்லை எனவும் ஆர்வலர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பூங்காவின் இன்றைய தோற்றம்
மேலும், சிறுவர் பூங்கா ஒன்றிற்கான எல்லா கட்டுமானக் கூறுகளையும் கொண்டுள்ள போதும் அந்த சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் யாரும் வந்து விளையாடுவதனை அவதானிக்க முடியாதுள்ளது.
குறித்த பூங்கா, நீண்ட நாட்களாக பூட்டப்பட்ட நிலையிலேயே இருப்பது மாத்திரமன்றி அதனுள் யாரும் உட்பிரவேசிக்க வேண்டாம் என அறிவித்தல் ஒன்றும் முல்லைத்தீவு பிரதேச சபையினரால் ஒட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, கரைதுறைபற்று பிரதேச சபை பூங்கா என பெயர்ப்பலகை ஒன்றினூடாக இந்த பூங்கா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்கையில், முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள இந்த பூங்காவிற்கு சற்றுத் தொலைவிலேயே கரைதுறைபற்று பிரதேச செயலகம் அமைந்துள்ளமையும் நோக்கத்தக்கது.
உட்கட்டமைப்புக்கள்
மேலும், பூங்காவின் முன் பக்கம் மதில் அமைத்து இரு பிரதான வாயில்களைக் கொண்டு அவற்றுக்கு இரும்பால் ஆன கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மதிலின் உட்புறமாக அழகூட்டுவதற்காக மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளதுடன் உட்பகுதியில் சிறுவர்கள் விளையாடுவதற்கான ஊஞ்சல் மற்றும் இராட்டினம் போன்ற விளையாட்டு கட்டமைப்புக்களும் நிறுவப்பட்டுள்ளன.
அது மாத்திரமன்றி, காவலாளிக்கான இடம் கூட ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பூங்காவின் உட்பகுதி முழுவதும் சிறு பற்றைக் காடாக இருக்கின்றது.
மேலும், மரங்களின் காய்ந்த இலைகள் சருகாக கிடப்பதும் முட்செடிகள் வளர்ந்திருப்பதுமாக உள்ளதுடன் அவதானத்தினை நிரப்பும் காட்சித் தோற்றங்களாகவும் அவை உள்ளன.
ஏன் சிறுவர்கள் வருவதில்லை
அதேவேளை, உண்ணாப்பிலவு என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த பூங்காவினை அமைத்தது முதல் சிறுவர்கள் யாரும் பயன்படுத்தவில்லை என அப்பகுதி முதியவர் ஒருவர் குறிப்பிட்டார்.
மேலும், முல்லைத்தீவு நகரைச்சூழவுள்ள உண்ணாப்பிலவு மற்றும் முல்லைத்தீவு கடற்கரை ஆகிய இடங்களில் சிறுவர் பூங்காக்கள் அமைந்துள்ளன. இவை தவிர முல்லைத்தீவு நகரினை சூழ்ந்துள்ள ஆரம்பப் பாடசாலைகளிலும் சிறுவர் பூங்கா இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்லா சிறுவர் பூங்காக்களிலும் குறைந்தளவு பயன்பாடு இருந்து வந்த போதும் இந்த பூங்காவில் பயன்பாடு முற்றாக இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கும் விடயமாகும் என இது பற்றி பொதுமக்கள் சிலரிடம் மேற்கொண்டிருந்த கருத்துக் கேட்டல்களின் போது அவர்கள் குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது.
பொருத்தமான செயற்பாடுகள்
இந்நிலையில், பொருத்தமான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கரைதுறைபற்று பிரதேச செயலகம் தவறிப் போகின்றதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை என சமூக ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
இதன் நிர்வாக எல்லையினுள் பல விடயங்கள் தொடர்பில் கவனமெடுப்பதற்கான தேவைகள் இருந்த போதும் அவை தொடர்பில் கவனமெடுக்காது இருப்பதால் அவற்றை மக்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன.
மேலும், மக்கள் பயன்பாட்டுக்கென நிர்மானிக்கப்படுபவை மக்களின் பயன்பாட்டுக்காக அவர்களிடம் கையளிக்கப்படாது இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
ஆகையால், உண்ணாப்பிலவில் உள்ள கரைதுறைபற்று பூங்காவினை மீளவும் சிறுவர்கள் பயன்பாடுத்துவதற்கு ஏற்றவாறு புனரமைத்துக் கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |