கிழக்கில் மனித புதைகுழி.. செம்மணியைத் தொடர்ந்து இப்போது சம்பூர்!
நேற்றைய தினம் திருகோணமலை - சம்பூர் பகுதியில் மனிதப் புதைகுழி என சந்தேகப்படும் இடம் ஒன்று கண்டறியப்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் முதல் கட்ட 15 நாள் அகழ்வுப் பணிகளின் நிறைவில் மொத்தமாக 65 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, அப்பகுதியில் அகழ்வுப்பணிகள் தற்காலிகமாக, ஓய்விற்காக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று 21.07.2025 ஆரம்பிக்கப்படவிருந்தன.
அதற்கிடையில், திருகோணமலை - சம்பூர் கடற்கரையை அண்டிய பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மனித மண்டையோடு உள்ளிட்ட சில மனித எலும்புத் தொகுதிகள், மனித எச்சங்கள் வெளிவந்தததையடுத்து குறித்த கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டது.
மனிதப் பேரவலங்கள்
இச்சம்பவம், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் கொடூரமான காலப்பகுதியையும் குறிப்பாக வடக்குக் கிழக்கில் நடந்த மனிதப் பேரவலங்களான மனிதப் படுகொலைகளின் வரிசையில் கிழக்கில் சம்பூரில் நிகழ்ந்த படுகொலைகளின் பயங்கரத்தையும், அதன் நினைவுகளையும் மீண்டும் மக்கள் மனதில் எழுப்பியுள்ளதோடு அதற்கு நீதி கிடைக்குமா எனும் ஏக்கத்தையும் உண்டாக்கியிருக்கிறது.
கடந்த வியாழக்கிழமை (2025.07. 17) மூதூர் - சம்பூர் கடற்கரையோரப் பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோரப் பகுதியில், கடந்த ஒரு வாரகாலமாக எம்.ஏ.ஜி (MAG) எனப்படும் கண்ணிவெடி அகழும் நிறுவனம், தங்களுக்குரிய தளபாடங்கள் மற்றும் பொருட்களுடன் முகாமிட்டு, கடந்த வியாழக்கிழமை முதல் கண்ணிவெடி அகழும் பணியைத் தொடர்ந்தது.
இதன்போது 2025.07.20 ஞாயிறு குறித்த பகுதியில் மனித மண்டையோடு உள்ளிட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அகழ்வுப் பணி உடனடியாக நிறுத்தப்பட்டது.
பின்னர், பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு அது நீதிபதிக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் குறித்த இடத்தை பார்வையிட்டார்.
கண்ணிவெடி அகழ்வு
அத்தோடு அப்பணியை எதிர்வரும் 23ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டு, அப்பகுதியை நீதிபதியின் முன்னிலையில் அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் ஆகிய திணைக்களங்களின் பிரசன்னத்துடன் எதிர்வரும் புதன்கிழமை (2025.07.23) அகழ்வதற்கும் உத்தரவிட்டுள்ளதுடன் பொலிஸாரைக் குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காக ஈடுபடுத்துமாறும் பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த அகழ்வுப் பணியின் போது சிதைவடைந்த மனித தலைப்பகுதி மற்றும் கால்களின் எலும்புப்பகுதிகளே கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியை அண்மித்த பகுதியிலிருந்து சுமார் 40 மீட்டர் தூரத்தில் சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கிழக்கில் இராணுவமும், முஸ்லிம் ஊர்காவல் படைகளும் இணைந்து அரசின் திட்டமிடலுடன் நடத்தப்பட்ட படுகொலைகளாகக் கருதப்படுகின்ற அம்பாறை மாவட்டத்தின் உடும்பன்குளம், திராய்க்கேணி, வீரமுனை உள்ளிட்ட இன்னும் பல படுகொலைகளும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு,சத்துருக்கொண்டான், சித்தாண்டிப் படுகொலைகள் போன்ற மிகக் கொடிய படுகொலை நடந்த இடமே இந்த சம்பூர்ப் படுகொலையாகும்.
திருகோணமலை - சம்பூர் பகுதி, இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது பல மனித உரிமை மீறல்களுக்கும், பொதுமக்கள் படுகொலைகளுக்கும் சாட்சியாக இருந்துள்ளது.
குறிப்பாக, சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் 1990 07.07ஆம் திகதி இப்பகுதியில் நடந்த ஒரு கோரமான சம்பவத்தில், அப்பாவிப் பொதுமக்கள் பெருமளவில் இராணுவம் மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படையினர்களால் படுகொலை செய்யப்பட்டனர். சம்பூர் கிராமத்தில் வெட்டியும் சுட்டும் 57 பேர் கொல்லப்பட்டதாகப் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவங்களின் விளைவாக, அப்பகுதி மக்கள் இடம்பெயரச் செய்யப்பட்டு அவர்களின் சொத்துகளும், காணிகளும் கூட சூறையாடப்பட்டன. இவ்வாறான பெரும் துன்பங்களை அனுபவித்த அந்த மக்களின் உயிரிழந்த உறவுகளின் உடல்கள் மீட்கப்படாமலும், முறையாக அடையாளம் காணப்படாமலும், உரிய முறையில் அல்லாமல் புதைக்கப்பட்டும் இருந்தது.
இந்தப் படுகொலைகளின் நினைவாகவே சம்பூர் கடற்கரையோரத்தில் தூபியொன்று அமைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அந்த மக்களால் அங்கு அஞ்சலிகள் செய்யப்படுவதோடு நீதிக்கான குரல் தொடர்ந்தும் ஒலித்து வந்தது. இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் அந்தப் பகுதி மக்களின் நீதி மற்றும் உண்மைக்கான தேடலுக்கு மேலும் நல்ல நம்பிக்கையும் வலுவும் சேர்த்துள்ளது என பலரால் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



