செம்மணி மனிதப் புதைகுழியில் மீண்டும் இன்று முதல் அகழ்வு!
இடைநிறுத்தப்பட்ட யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீள ஆரம்பமாகவுள்ளன.
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளின் போது மனித என்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய கடந்த மே மாதம் 15ஆம் திகதி முதல் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின.
அந்தப் பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மே மாதம் 17ஆம் திகதி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
அகழ்வுப் பணிகள்
பின்னர் ஜூன் மாதம் 2 ஆம் திகதி திகதி அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பமாகி ஜூன் மாதம் 7ஆம் திகதியோடு முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்தன.
மொத்தமாக 9 நாள்கள் இடம்பெற்ற செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வுப் பணியில் 19 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை 45 நாள்கள் மேற்கொள்வது எனவும், 15 நாள்களுக்கு ஒருமுறை சிறிய இடைநிறுத்தல்களுடன் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வது எனவும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் தீர்மானிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட முதல் 15 நாள்களுக்கான அகழ்வுப் பணிகள் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை என 15 நாள்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன.
என்புத் தொகுதிகள் அடையாளம்
முதலாம் கட்ட அகழ்வு மற்றும் இரண்டாம் கட்டத்தின் முதல் 15 நாள்கள் இடம்பெற்ற அகழ்வு என மொத்தமாக 24 நாள்கள் இடம்பெற்ற செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இருந்து இதுவரை 65 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், பாடசாலை புத்தகப்பை, சிறுமிகளின் ஆடைகள், பாதணிகள், காற்சங்கிலிகள், சிறிய பிளாஸ்டிக் வளையல்கள், பிளாஸ்டிக் பூமாலை உட்பட பல்வேறு சான்றுப் பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று காலை மீள ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



