நூறுக்கணக்கான மாணவர்களை ஏமாற்றிய குற்றச்சாட்டு தொடர்பில் கனடா அதிகாரிகள் நடவடிக்கை
நூறுக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு போலியான ஆஃபர் கடிதங்களை வழங்கி ஏமாற்றியது தொடர்பாக, கனடா அதிகாரிகள் இந்தியர் ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, Brijesh Mishra என்பவர் நடத்தும் Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி கனடாவில் கல்வி கற்பதற்காக, கல்வி விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார்கள் 700 மாணவர்கள். அவர்கள், 2017 -18 காலகட்டத்தில் கனடாவுக்கு வந்துள்ளார்கள்.
இந்நிலையில் அவர்கள் படிப்பை முடித்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் போதுதான் தாங்கள் அனைவரும் ஏமாற்றப்பட்ட விடயம் அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.
மோசடி தொடர்பாக தீவிர விசாரணை
மேலும், அவர்களுடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் (admission offer letters) போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்பட இருப்பதாக கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சி கடிதங்கள் அனுப்பிய விடயம் இரு நாடுகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசு மற்றும் கனடா தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம், மாணவர்கள் போராட்டம் ஆகிய விடயங்களைத் தொடர்ந்து, சில மாணவர்களின் நாடுகடத்தலுக்கு கனடா அதிகாரிகள் இடைக்காலத்தடை விதித்தார்கள்.
இதன்போது கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, இந்த மோசடி தொடர்பாக தீவிர விசாரணை நடத்திவருவதாக தெரிவித்துள்ளார்.
ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவு
அத்துடன் குறித்த மாணவர்கள் ஒவ்வொருவருடைய வழக்கும் தனிப்பட்ட முறையில் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் வரை, அவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதிகள் வழங்க கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்தியக் குடிமகனான Brijesh Mishra மீது மாணவர்களை ஏமாற்றியது தொடர்பாக ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், Brijesh Mishra மீது ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |