இங்கிலாந்தில் குடியேற்ற விதிகளில் திடீர் மாற்றம்
இங்கிலாந்தில் பணிபுரியும் வெளிநாட்டு பராமரிப்புப் பணியாளர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கான 15 ஆண்டு காத்திருப்பு திட்டத்தை ஷபானா மஹ்மூத் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இங்கிலாந்தில் வசித்து வரும் வெளிநாட்டு பராமரிப்புப் பணியாளர்கள் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கு 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற தனது முன்னைய திட்டத்தை, இங்கிலாந்தின் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் கைவிட்டார்.
இதன்படி, குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பராமரிப்புப் பணியாளர்கள் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளில் நிரந்தரக் குடியேற்ற அந்தஸ்தைப் (ILR) பெற முடியும்.
ஐந்து ஆண்டுகளில் நிரந்தரக் குடியேற்றம்
புதிய முடிவின்படி யாருக்கு ஐந்து ஆண்டுகளில் நிரந்தரக் குடியேற்றம் கிடைக்கும்? என்ற விபரத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
ஆண்டுக்கு குறைந்தது £25,000 சம்பளம் பெறும் சமூகப் பராமரிப்புத் துறையில் (Social Care) பணிபுரிபவர்கள். 2025 மே மாதத்திற்கு முன்னர் இங்கிலாந்துக்கு வந்திருக்க வேண்டும்.

அவர்களுடைய விசா நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இவர்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஐந்து ஆண்டு பாதையின் அடிப்படையில் நிரந்தரக் குடியேற்றத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
அதேநேரம், தங்களது விசா நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத பராமரிப்புப் பணியாளர்கள் மேலும் ஐந்து ஆண்டு விசாவிற்கு விண்ணப்பித்து, அதன் பின்னர் நிரந்தரக் குடியேற்றத்தைப் பெற முயற்சிக்கலாம் என மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
புதிய விதிமுறைகளின் படி
ஏனைய வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான புதிய விதிமுறைகள் புதிய திட்டத்தின்படி:
£50,00இற்கும் குறைவான வருடாந்த சம்பளம் பெறுவோர், நிரந்தரக் குடியேற்றம் பெற 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

£50,000இற்கும் அதிகமான சம்பளம் பெறுவோர், ஐந்து ஆண்டுகளில் விண்ணப்பிக்கலாம்.
இதன்படி, மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளில் நிரந்தரக் குடியேற்றம் பெறலாம்.
£125,000-க்கும் அதிகமாக சம்பாதிக்கும் அதிக வரி செலுத்துவோர்: மூன்று ஆண்டுகளில் விண்ணப்பிக்கலாம்.
இந்தநிலையில், அகதிகளுக்கான புதிய விதிமுறைகளின் படி, சிறிய படகுகள் மூலமாகவோ அல்லது சட்டவிரோதமான வழிகள் மூலமாகவோ ஆங்கிலக் கால்வாயைக் கடந்து இங்கிலாந்துக்கு வந்த அகதிகளுக்கு நீண்ட காத்திருப்பு காலம் விதிக்கப்படும்.
இதற்கமைய, வேலை செய்பவர்கள் அல்லது கல்வி கற்பவர்களுக்கு 20 ஆண்டுகள். வேலை செய்யாதவர்கள் அல்லது கல்வி கற்காதவர்களுக்கு 30 ஆண்டுகள்.
எனினும், இந்தத் திட்டம் நியாயமற்றது மற்றும் நடைமுறைப்படுத்த முடியாதது என்று Refugee Council அமைப்பு விமர்சித்துள்ளது.
அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள்
முன்னதாக, பெரும்பாலான வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு நிரந்தரக் குடியேற்றம் பெறுவதற்கான ஐந்து ஆண்டு காலத்தை 10 ஆண்டுகளாக அதிகரிக்க மஹ்மூத் திட்டமிட்டிருந்தார். சிலருக்கு 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

ஆனால், பல தொழிலாளர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த திட்டம் காரணமாக, தொழிலாளர் வெற்றிடங்கள் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டது. பல தொழிலாளர் கட்சி (Labour Party) நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர் குறிப்பாக சமூகப் பராமரிப்புத் துறையில் பணியாற்றும் வெளிநாட்டவர்களின் எதிர்காலம் குறித்து கவலை எழுப்பப்பட்டது.
வீட்டுவசதித்துறைச் செயலாளர் ஏஞ்சலா ரெய்னரும், ஏற்கனவே இங்கிலாந்தில் இருப்பவர்களுக்கான விதிமுறைகளைப் பின்னோக்கிப் பொருந்தச் செய்வது அவர்களுக்கு வழங்கப்பட்ட எதிர்பார்ப்புகளை மாற்றுவதாகும் என்று விமர்சித்திருந்தார்.
இதன் காரணமாகவே, தனது முன்னைய திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை மஹ்மூத்துக்கு ஏற்பட்டது. முன்னைய அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கைகளால் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள் இங்கிலாந்துக்கு வந்ததாகக் கூறி, புதிய குடியேற்றக் கட்டுப்பாடுகளை, தற்போதைய அரசாங்கம் முன்வைத்துள்ளது.
2021 முதல் 2024 வரை நிகரக் குடியேற்றம் மூலம் இங்கிலாந்தின் மக்கள் தொகையில் 2.6 மில்லியன் பேர் அதிகரித்துள்ளனர். 2026 முதல் 2030 வரை 1.3 மில்லியன் முதல் 2.2 மில்லியன் பேர் வரை நிரந்தரக் குடியேற்ற அந்தஸ்தைப் பெறலாம்.
பில்லியன் கணக்கான பவுண்டுகள் சேமிக்கப்படும்
முன்னர் வெளியிடப்பட்ட கணிப்பின்படி, 2026 முதல் 2030 வரை நிரந்தரக் குடியேற்றம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட 117,000 வெளிநாட்டு பராமரிப்புப் பணியாளர்களால் அரசுக்கு £4.2 பில்லியன் செலவு ஏற்படும் என மதிப்பிடப்பட்டது.
அவர்களுடைய வயது வந்த குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்தால் இந்தச் செலவு £9.5 பில்லியனாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டது.

எனினும், புதிய மாற்றங்கள் மூலம் பில்லியன் கணக்கான பவுண்டுகள் சேமிக்கப்படும் என மஹ்மூத் தெரிவித்துள்ளார். இருப்பினும், முழுமையான நிதி விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, உள்துறைச் செயலாளர் தனது முடிவை மாற்றிக் கொண்டது அரசுக்கு பில்லியன் கணக்கான பவுண்டுகள் செலவை ஏற்படுத்தும் என்று, கன்சர்வேட்டிவ் கட்சி விமர்சித்துள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சியின் நிழல் உள்துறைச் செயலாளர் கிறிஸ் பிலிப், தொழிலாளர் கட்சிக்குள் ஏற்பட்ட எதிர்ப்பே இந்த மாற்றத்திற்குக் காரணம் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே இங்கிலாந்தில் பணியாற்றி வருபவர்களுக்கு திடீரென குடியேற்ற விதிகளை மாற்றுவது நியாயமற்றது என்றும், இது நாட்டின் திறமையான தொழிலாளர் வெற்றிடங்களை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
விசா நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்
இது இவ்வாறிருக்க, சில பிரிவினருக்கு தற்போதைய குடியேற்றப் பாதை தொடர்ந்து இருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது:
Hong Kong British Nationals (Overseas) விசா வைத்திருப்பவர்கள். பிரித்தானிய ஆயுதப் படைகளில் பணியாற்றுபவர்கள். பிரித்தானியாவுடன் குறிப்பிட்ட தொடர்பு கொண்டவர்கள். Windrush திட்டம் உள்ளிட்ட பழைய குடியேற்றத் திட்டங்களின் கீழ் இருப்பவர்கள்.

முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டியது இந்தச் செய்தியில் வெளிநாட்டு Care Workers தொடர்பாக முக்கியமான மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 மே மாதத்திற்கு முன்னர் இங்கிலாந்துக்கு வந்து, ஆண்டுக்கு குறைந்தது £25,000 சம்பளம் பெற்று, விசா நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் Social Care Workers-க்கு மாத்திரமே ஐந்து ஆண்டுகளில் ILR பெறும் வாய்ப்பு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.