கடற்றொழிலாளர்களை குழப்புவதற்கு முயற்சிக்க வேண்டாம்..! எதிர்க்கட்சியை எச்சரித்த அமைச்சர் சந்திரசேகர்
பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நாம் கடற்றொழிலாளர்களைக் கைவிடமாட்டோம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(23) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கரைவலை மீன்பிடி
அவர் மேலும் தெரிவிக்கையில், கரைவலை மீன்பிடி என்பது ஒரு பாரம்பரிய முறைமையாகும்.
அந்த முறைமை இலங்கையில் தடை செய்யப்படவில்லை, அது தொடர்ந்து முன்னெடுக்கப்படும். எனினும், உழவு இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி, கடல்வளத்தை அழிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் மீன்பிடி நடைமுறைகளே தடை செய்யப்பட்டுள்ளன.

எந்தவித அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் இன்றி, தமக்குத் தேவையான விதத்தில் கரைவலை மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடந்த காலங்களில் துறைசார் அமைச்சர்கள் அனுமதி வழங்கியமையாலேயே கரைவலை மீன்பிடித் தொழிலில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
அந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே கரைவலை மீன்பிடித் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.
முதலில் நாம் இரு மாதங்கள் அவகாசம் கோரினோம். ஆனால், அந்த கால எல்லை போதாது என்பதால், அறிவியல் பூர்வமான தீர்வை வழங்குவதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரியிருந்தோம். கடற்றொழிலாளர்களும் இதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சியின் சூழ்ச்சி
கடல் வளங்களை நாசமாக்க இடமளிக்க முடியாது. சட்டவிரோத நடவடிக்கைகளையும் அனுமதிக்க முடியாது. நாம் கடற்றொழிலாளர்களை ஒருபோதும் கைவிடமாட்டோம்.

பாரம்பரியமான முறையில் கரைவலை மீன்பிடியில் ஈடுபடலாம், அதற்குரிய புதிய முறைமை உருவாக்கப்படும். எனவே, தடை செய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம். நாம் கால அவகாசம் கோரியுள்ள விடயத்தை வைத்து, அரசியல் நடத்தி கடற்றொழிலாளர்களைக் குழப்புவதற்கு எதிர்க்கட்சியினர் முற்படக் கூடாது.
அதேவேளை, இந்திய கடற்றொழிலாளர்கள ் பிரச்சினை என்பது நீண்ட நாட்கள் பிரச்சினையாகும். இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தற்போது எல்லைத் தாண்டல்கள் குறைவடைந்துள்ளன என்றார்.
9 மாத குழந்தையை கட்டி வைத்து அடித்த நபர்.. அரசில் உயர் பதவியில் உள்ளவர்களின் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்