சிறைச்சாலைக்குள் விசேட பாதுகாப்பின் கீழ் சாமர சம்பத் எம்பி
விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்கவிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர் தற்போது கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
8.1 மில்லியன் இலஞ்சம்
நேற்று பிற்பகல் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் பொசுபேற்று இறக்குமதி செய்யும் மூன்று நிறுவனங்களிடமிருந்து 8.1 மில்லியன் ரூபா இலஞ்சம் கோரியமை, அந்தப் பணத்தை அரசியல் தேவைக்காகத் தனது செயலாளர் சுமதிபால லியனாராச்சியின் வங்கிக் கணக்கில் வரவு வைத்தமை மற்றும் மூன்று இரத்தினக்கல் வர்த்தகர்களிடமிருந்து மேலதிகமாக 2.4 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.