தமிழரசுக் கட்சி மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த கட்டளையானது நேற்று(30.07.2026) திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு ஒத்திவைப்பு
இந்தக் கட்டளைக்குப் பின்னரே அடுத்த கட்டமாக மூல வழக்கு மீதான விவகாரத்தை நீதிமன்றம் எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வழக்கில் எதிராளிகளில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மேற்படி இடைபுகுநர் எதிராளிக்கான விண்ணப்பம் தொடர்பில் தமது எழுத்துமூல சமர்ப்பணத்தை தாமே முன்வைத்துள்ளார்.

எதிராளிகளான தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம் மற்றும் முன்னைய பொதுச்செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கம் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் எழுத்து மூல சமர்ப்பணங்களை மன்றில் சமர்ப்பித்திருந்தார்.
அத்துடன் ஏனைய எதிராளிகளான சிறீதரன் எம்.பி, குகதாசன் எம்.பி, சீ.யோகேஸ்வரன் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரனும், வழக்காளி தரப்பில் வழக்காளியின் சட்டத்தரணியும் இந்த விவகாரத்தையொட்டி தமது எழுத்து மூல சமர்ப்பணங்களை மன்றில் முன்வைத்திருந்தனர்.
இதனையடுத்து இந்த விவகாரத்தையொட்டி நீதிமன்றின் கட்டளை ஓகஸ்ட் 28ஆம் திகதி வழங்கப்படும் எனத் தெரிவித்து நீதிபதி வழக்கை ஒத்திவைத்துள்ளார்.