நீர்கொழும்பில் கோர விபத்தில் பலியான இளைஞர்கள்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
அதிவேகத்தில் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாகி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
நீர்கொழும்பு - மினுவாங்கொட வீதியில், போலவலன பகுதியில் நேற்று இரவு இரண்டு இளைஞர்களின் உயிரைப் பறித்த கொடூர வீதி விபத்து தொடர்பான அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கன்டெய்னர் முனையத்திற்குள் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்த பிரைம் மூவர் ரக லொறியின் டிரெய்லர் பகுதியில், அதிவேகமாக வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியது அந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
தீ வைக்கப்பட்ட வாகனம்..
இந்த விபத்தின் காரணமாக, மோட்டார் சைக்கிள்களை செலுத்தி வந்த 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் கூடிய பொதுமக்கள் சிலர் அந்த பிரைம் மூவர் லொறிக்கு தீ வைத்துள்ளனர்.
நீர்கொழும்பு மாநகரசபையின் தீயணைப்புப் படையினரும், கட்டான பொலிஸாரும் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்து மற்றும் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஆகிய இரண்டும் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் நீர்கொழும்பு, தாகொன்ன பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய தலிஷ நிம்னெத் சிறிவர்தன மற்றும் 19 வயதுடைய கவிந்து ஹஷான் சோமதிலக்க என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.