கனடாவில் இலங்கை மாணவர்கள் கல்வி கற்க சிக்கல்! இரா.சாணக்கியன் விசனம்
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கனடாவுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களால் இலங்கை மாணவர்கள் கனடாவில் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கனடா மற்றும் இலங்கை இடையே இராஜதந்திர சிக்கலை அலி சப்ரி உருவாக்கியுள்ளார் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இராஜதந்திர சிக்கல்
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான பிரச்சினை அந்த இரு நாடுகளாலும் தீர்க்கப்படும் என்றும், அதன் நடுவில் குதித்து தேவையற்ற அறிக்கையை வெளியிட்டு இலங்கையுடன் இராஜதந்திர சிக்கலை அலி சப்ரி உருவாக்கியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் கனடாவுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களால் இந்நாட்டு மாணவர்கள் கனடாவில் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்க நேரிடும்.
இதேவேளை, இன்றும் கொழும்பில் உள்ள கனேடிய தூதரகத்திற்கு முன்பாக பெருமளவிலான இளைஞர்கள் விசாவிற்காக காத்திருப்பதாக சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.