ஹவாய் தீவுக்கான பயணங்கள் தொடர்பில் கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை
ஹவாய் தீவுகளில் வசித்து வரும் கனேடிய மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், அமெரிக்காவின் உள்ளூர் செய்தி விளம்பரங்களை அவதானித்து அதன் அடிப்படையில் செயல்படுமாறும் கனேடிய வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக வெளியேறுதல் தொடர்பில் விடுக்கப்படும் அறிவுருத்தல்களுக்கு அமைய குறித்த பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு கனேடிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனேடியர்கள் எவரும் உயிரிழந்ததாக இதுவரை தகவல் கிடைக்கப் பெறவில்லை எனவும், ஹவாயில் வசித்து வரும் கனடியர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கனேடிய வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கனேடியர்களுக்கு அறிவுறுத்தல்
குறித்த தீ விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை கனடா வெளியிட்டுள்ளது.
கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனின் ஜாலி இந்த இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். காயங்களுக்கு உட்படடவர்கள் துரித கதியில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹவாய் தீவுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கனேடியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மாவுய் பகுதிக்கான பயணம்
அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் பாரிய காட்டுத்தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரையில் சுமார் 53 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காயமடைந்துள்ளதுடன் அதிக அளவில் சொத்துக்களுக்கு சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு பின்னணியில் ஹவாயின் மாவுய் பகுதிக்கான பயணங்களை மேற்கொள்வது ஆபத்தானது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
தொடர்ச்சியாக தீ பரவி வருவதன் காரணமாக தீவுகளின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹவாய் தீவுகளின் மிகவும் பிரபல்யமான லஹாய்னா என்னும் பகுதியில் பாரியளவு காட்டுத்தீயனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |