சொகுசு வாகனங்களை அகற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி
அரச நிறுவனங்களுக்கு பெரும் செலவுகளை ஏற்படுத்தும் சொகுசு வாகனங்களை முறையாக அகற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று(3) இவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “சில சொகுசு வாகனங்களின் பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்காக ஏற்படும் அதிக செலவினை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அனுமதி
இவ்வாறான சொகுசு வாகனங்களை அப்புறப்படுத்துவது பொருளாதார ரீதியில் அதிக பலன் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள வாகனங்கள் குறித்தும் முறையான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, சுங்க இயைபு முறை குறியீடு 87.03இன் கீழுள்ள 1800சிசி கொள்ளளவுக்கு அதிகமான பெட்ரோல் இயந்திர வாகனங்கள் மற்றும் டபள் கெப், சிங்கிள் கெப், வேன்கள், பேருந்துகள் நீங்கலாக 2300சிசி கொள்ளளவுக்கு அதிகமான டீசல் இயந்திர வாகனங்கள் என்பவற்றை அடுத்த வருடம் மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட தலைமை கணக்காய்வு அதிகாரிகளால் அகற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு திறைசேரி கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு, சுற்றறிக்கை மூலம் ஆலோசனை வழங்குவதற்கான அதிகாரத்தை திறைசேரி செயலாளருக்கு வழங்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |