பொது வேட்பாளர் விடயம் விரைவில் முடங்கிப் போகும்: சீ.வீ.கே சிவஞானம் உறுதி
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் யார் என்ற தெரிவிலேயே இந்த விடயம் முடங்கும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம்( (C. Velupillai Kandaiah Sivagnanam)) தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (01.06.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"நான் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு மாறானவன். பொது வேட்பாளர் தேவையற்ற விடயம் என அரசியல்வாதிகளுக்குள் முதலில் எங்கள் தரப்பில் இருந்து கூறியது நான்தான்.
அதாவது, தமிழ்ப் பொது வேட்பாளர் சாத்தியமில்லை என்றும், அதற்கான காரணங்களையும் நான் கூறியிருக்கின்றேன். தற்பொழுதும் கூறுகிறேன்.
தமிழ்ப் பொது வேட்பாளர் யார் என்ற தெரிவிலேயே இந்த விடயம் முடங்கிப் போகும்.
கடந்த கால தேர்தல்களில் நாங்கள் நிரூபித்து வந்த மக்கள் ஆணை மலினப்படுத்தப்படும் என்ற கருத்தையும் கூறிக்கொள்கின்றேன்.
கடந்த தேர்தலில் தேசியத்துக்கு விழுந்த வாக்கை எடுத்துப் பார்த்தால் அது புரியும். தற்போது மேலும் நாங்கள் பிளவுபட்டு இருக்கின்ற போது என்ன நடக்கும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.
ஆனால், ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்காகவே இவர்கள் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்வைத்தார்கள் என்ற அந்தக் கருத்தில் நான் உடன்படவில்லை.
இந்தத் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை முதலில் பேசியது சுரேஷ் பிரேமச்சந்திரன் தான். அது அவரது நியாயமான கருத்து. அதனை நான் பிழை என்று சொல்லவில்லை. எனினும், அதில் நான் உடன்படவே இல்லை.
எங்களுடைய தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் கட்சி ரீதியாக இதுவரையில் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
எனினும், கட்சி உறுப்பினர்கள் தனித்தனியே இது பற்றி பேசி வருகின்றார்கள்.
இந்த விடயம் தொடர்பில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழுவில் நாங்கள் கலந்துரையாடியிருந்தோம். இந்த விடயத்தில் கட்சிக்குள்ளும் இரண்டு கருத்துக்கள் இருந்தன.
ஏனெனில், கட்சி முடிவெடுக்காமல் இருக்கின்ற போது கட்சி என்று சொல்லி சிலர் தனித் தனியாகவும் பேசியிருக்கலாம். அப்படி பேசி இருப்பதாகத்தான் செய்திகளும் வெளிவருகின்றன” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |