சாவகச்சேரியில் விதிமுறைகளைப் பின்பற்றாமல் அமைக்கப்படும் கடைத்தொகுதிகள்: வர்த்தகர்கள் குற்றச்சாட்டு
சாவகச்சேரி நகரசபையானது கட்டடங்கள் அமைப்பதற்கான உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் கடைத்தொகுதிகள் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக துறை சார்ந்தவர்களும், வர்த்தகர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சாவகச்சேரி நகரசபையின் பொதுச் சந்தை வளாகத்தில் உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி உதவி திட்டத்தின் (LDSP) மூலம் சுமார் 38.80 மில்லியன் ரூபா செலவில் புதிய கடைத் தொகுதிகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் இடம் பெற்று வருகின்றன.
இந்நிலையிலேயே குறித்த கட்டிடத் தொகுதி அமைக்கப்படுகின்ற முறைமையானது உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் அமைக்கப்படுகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்டிடம் அமைக்கும் விதி
நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிக்கின்ற சாதாரண குடியிருப்பாளர் ஒருவர் தனது காணிக்குள் கட்டிடம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றால் RDA (வீதி அபிவிருத்தி அதிகார சபை) வீதியில் காணி அமைந்திருந்தால் வீதியின் மத்தியில் இருந்து 50 அடி தூரமும், RDD வீதியில் காணி அமைந்திருந்தால் வீதியின் மத்தியில் இருந்து 35 அடி தூரமும் தள்ளியே கட்டிடம் அமைக்கமுடியும் என்பது விதியாகும்.
ஆனால் நகரசபையானது சந்தையின் பின்புறமாக RDA மற்றும் RDD வீதிகளின் எல்லைக்குள் கட்டிடம் அமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் அத்திவாரம் போடப்பட்டு கட்டிட பணிகள் ஆரம்பித்த நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை RDA தமது எல்லைக்குள் அனுமதி இன்றி கட்டிடம் அமைக்கப்படுவதை அறிந்து தமது எல்லைக்குள் கட்டிடம் அமைப்பதை தடுத்து நிறுத்தியுள்ளது.
எனினும் நகரசபையானது RDD வீதிப்பக்கமாக தொடர்ந்தும் கட்டிடம் அமைக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளது.
கடும் சிரமங்கள்
குறித்த வீதியாலேயே மன்னாருக்கு செல்கின்ற அரச, தனியார் பேருந்துகள் பயணித்து தனங்கிளப்பு வீதியின் புகையிரத கடவையூடாக திரும்புகின்றன.
குறித்த சந்தியில் புகையிரதக் கடவையும் எதிர்ப்பக்கத்தில் கழிவு நீர் வாய்க்காலும் அமைந்துள்ளதால் பேருந்துகளும், கனரக வாகனங்களும் திரும்புவதற்கு கடும் சிரமங்களை சந்திக்கின்றன.
இந்நிலையில் வடிகானுக்கு மூன்றடி தூரத்திலேயே கட்டிடம் அமைக்கப்படுகின்றது. இதேவேளை கட்டத்தின் வீதிப்பக்க தூண்கள் அமைக்கப்படுகின்றமைக்கு மேலால் இலங்கை மின்சார சபையின் உயரழுத்த மின்மார்க்கம் செல்கின்றது.
வீதியின் எதிர்த்திசையில் புகையிரத வீதி அமைந்துள்ளதால் மின்சாரசபை உயரழுத்த மின்கட்டமைப்பை மாற்றியமைக்கும் சாத்தியக்கூறும் இல்லை.
அண்மையில் சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்திற்கு அருகில் உள்ள தனியார் கட்டடத்தின் மேல் தண்ணீர் தாங்கியை பார்வையிட ஏறிய இளைஞர் ஒருவர் உயரழுத்த மின்தாக்கி இறந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நவீன சந்தைக் கட்டிடத்தொகுதி
மேலும் நகரசபையின் கண்டி வீதியில் அமைந்துள்ள நவீன சந்தைக் கட்டிடத்தொகுதியின் மேல்மாடியில் உள்ள கடைகளில் திறக்கப்படாமல் உள்ள சூழ்நிலையில் பயன்பாட்டில் இல்லாத கடைகளில் இராணுவத்தினரும் தங்கியுள்ளனர்.
இவ்வாறான சூழலில் சந்தையின் பின்புறமாக மாடிக்கட்டிடம் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறன நிலையில் உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளால் அமைந்த சபை கலைக்கப்பட்ட நிலையில் "ஊருக்குத்தான் உபதேசம்" எனும் வகையில் சாவகச்சேரி நகரின் கட்டமைவு தொடர்பான உரிய திட்டமிடல் இன்றி வருகின்ற நிதிகளை செலவு செய்தால் போதும் என்ற நகரசபையின் செயற்பாடுகளை பலரும் விமர்சித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |