போரை எதிர்கொள்ள தயாராக வேண்டும்! பிரிட்டனுக்கு எச்சரிக்கை
இன்னும் 3 வருடங்களில் ஒரு போரை எதிர்கொள்வதற்கு பிரிட்டன் (Britian) தயாராக வேண்டும் என அந்நாட்டின் புதிய இராணுவ ஜெனரல் ரோலண்ட் வாக்கர் (Gen Sir Roland Walker) தெரிவித்துள்ளார்.
புதிய இராணுவ ஜெனரலாக கடமையேற்ற அவர் நேற்று (23.07.2024) ஆற்றிய முதல் உரையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உலகில் அச்சுறுத்தல்கள் அதிகமாகி உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதன்மையான அச்சுறுத்தல்
அத்துடன், போர் தவிர்க்க முடியாதது எனவும் அதற்கு தயாராக இராணுவத்திற்கு போதுமான அளவு காலம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரிட்டன் இராணுவத்தின் பலத்தை 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் இரண்டு மடங்காகவும் இந்த தசாப்தத்துக்குள் மூன்று மடங்காகவும் அதிகரிப்பதே தற்போதைய குறிக்கோள் எனவும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
உக்ரைனை (Ukraine) ஆதரிக்கும் மேற்குலக நாடுகளுக்கெதிராக ரஷ்யா (Russia) பழிவாங்கும் நிலைப்பாட்டை ஏற்படுத்தினால் அது பிரிட்டனின் முதன்மையான அச்சுறுத்தலாக இருக்கும் என ரோலண்ட் வாக்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு
மேலும், தாய்வானை (Taiwan) மீள ஆக்கிரமிக்கும் சீனாவின் (China) நிலைப்பாடு மற்றும் ஈரானின் அணு ஆயுதக் கொள்கை போன்றவற்றையும் ஜெனரல் அச்சுறுத்தலாக கருதுகின்றார்.
அதேவேளை, இராணுவத்தை பலப்படுத்தல் என்பது வெறும் எண்ணிக்கையில் மட்டும் இல்லாது செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீனமயப்படுத்தல் ஆகியவற்றில் தங்கியிருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |