வியாழேந்திரனின் சகோதரர் உள்ளிட்ட இருவரும் விளக்கமறியலில்
மட்டக்களப்பில் 15 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் கைதான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின் சகோதரர் உள்ளிட்ட இரண்டு பேரையும் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டார்.
அன்றைய தினம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இருவரையும் முன்னிலைப்படுத்துமாறு மட்டக்களப்பு நீதிவான் உத்தரவிட்டார்.
விளக்கமறியல் நீடிப்பு
நேற்று மட்டக்களப்பு நகர் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து காத்தான்குடியைச் சேர்ந்த காணி விற்பனையாளர் ஒருவரிடமிருந்து 15 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற முயன்ற வியாழேந்திரன் எம்.பியின் சகோதரர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் அங்கு மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச, ஊழல் ஒழிப்புப் பிரிவினர் சுற்றிவளைத்துக் கைதுசெய்திருந்தனர்.
முற்கூட்டியே கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய கொழும்பிலிருந்து சென்றிருந்த இலஞ்ச, ஊழல் ஒழிப்புப் பிரிவினரே இருவரையும் கைதுசெய்திருந்தனர்.
இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவரும் எதிர்வரும் ஜூலை 4ஆம்
திகதி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.