வெளிநாட்டு உளவுச் சேவையின் தலையீட்டுடன் இலங்கையில் குண்டுத்தாக்குதல்..! மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்
இலங்கையில் வடக்கில் அல்லது தெற்கில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என வெளியாகிய தகவல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த மாதம் பயங்கரவாத தாக்குதல் ஒன்று நடத்தப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி பாதுகாப்புச் செயலாளருக்கு, பொலிஸ்மா அதிபரால் அனுப்பப்பட்டதாக கூறப்படும் கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார கேள்வியெழுப்பியிருந்தார்.
வடக்கு, தெற்கில் குண்டு வெடிக்கலாமென எச்சரிக்கை! நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாமென அறிவுறுத்தல் - அநுர தகவல் |
பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கறுப்பு ஜூலை தினத்தை நினைவு கூறும் வகையில் இந்த மாதம் 5ஆம் 6ஆம் திகதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சுட்டிக்காட்டும் கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
எனினும் இவ்வாறான தாக்குதல் ஒன்று நடத்தப்படுவதற்கான களநிலைமைகள் உறுதிப்படுத்தப்படவில்லை. பொது மக்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் முன்னுரிமையளிப்பதன் காரணமாக புலனாய்வு தரப்பினருக்கு கிடைத்த இந்த தகவல் குறித்து, விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த விடயம் குறித்த மக்கள் அச்சமடைய தேவையில்லை. தமது நாளாந்த நடவடிக்கைகளை வழமைப்போன்று மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம்! விடுதலைப் புலிகள் அமைப்பினை காரணம் காட்ட நடவடிக்கை - நாடாளுமன்றில் தகவல் |
பொலிஸ் ஊடப் பேச்சாளரின் விளக்கம்
இதேவேளை குறித்த கடிதம் தொடர்பில் ஊடகமொன்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவவிடம் கேள்வியெழுப்பியுள்ளது.
இதற்கு அவர் பதிலளிக்கையில், வடக்கு, கிழக்கு அல்லது தெற்கில் குண்டுத் தாக்குதலொன்றோ அல்லது நாசகார செயல்களோ, வெளிநாட்டு உளவுச் சேவை ஒன்றின் தலையீட்டுடன் இடம்பெறலாம் என்பது ஒரு தகவல் மட்டுமே.
பொலிஸாருக்கு இவ்வாறான தகவல்கள் பல்வேறு நபர்களிடம் இருந்து கிடைக்கும். அவ்வாறு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்று தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டிருந்தமையால், அது தொடர்பில் பாதுகாப்புச் செயலருக்கு அறிவிக்கப்பட்டது. அது ஒரு தகவல் மட்டுமே.
அந்த தகவல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உறுதி செய்து கொள்வதற்காகவும், அனைத்து உளவுத் துறைகளுக்கும் பகிர்ந்து கொள்வதை நோக்கமாக கொண்டும் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட அந்த தகவல் பாதுகாப்பு செயலரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதனைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
அநுரவின் கருத்து
பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரட்னவின் கடிதம் நகைப்பிற்குரியது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜே.வி.வி, எதிர்க்கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை இலக்கு வைத்து தாக்கதல் நடாத்தப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
இந்தக் கடிதமே நகைப்பிற்குரிய கடிதமாக நோக்கப்பட வேண்டுமென அனுரகுமார தெரிவித்துதுள்ளார்.
இவ்வாறான நிலைமையை ஏற்படுத்துவதற்கு ஜே.வி.பி ஒருபோதும் செயற்படாது எனவும் இந்தக் கடிதம் மூலம் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் கருத்துக்களை மூடி மறைப்பதற்காக சமூகத்தை அச்சத்திற்கு உள்ளாக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அச்சுறுத்தல்கள் மூலம் நாட்டு மக்களின் எதிர்ப்பு அலைகளை கட்டுப்படுத்தி விட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளுக்கு அப்பால் சென்று அரசியல் நகைச்சுவைகளை வழங்குபவராக மாற வேண்டாம் என பொலிஸ் மா அதிபரிடம் கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏதேனும் ஓர் சூழ்ச்சியை செய்து அதன் பழியை அரசாங்கத்திற்கு எதிரான தரப்புக்கள் மீது சுமத்தும் சதித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
