மன்னாரில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேசாலை பொலிஸ் பிரிவின் பேசாலை 8ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து நேற்று(07.08.2026) மதியம் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சடலம் கிடப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள், கிராம சேவையாளர் ஊடாக உடனடியாக பேசாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சடலம் மீட்பு
தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைகளின் போது, உயிரிழந்தவர் பேசாலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த லோரன்ஸ் மோரிஸ் (41) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதுடன்,கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும், அவரது வீடு சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தீவிர விசாரணை
சம்பவ இடத்திற்கு வருகை தந்த குற்றத்தடுப்பு மற்றும் தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவரின் கைப்பேசி நேற்று வியாழக்கிழமை (6) காலை 7.30 மணிக்குப் பின்னர் தொடர்புகொள்ள முடியவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மரணம் தொடர்பாக பேசாலை பொலிஸார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.