உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அதிரடி தீர்ப்பின் பின் சுரேஷ் சலேவின் எதிர்காலம்
நேற்றைய தினம் (22) வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒருவித மனநிறைவு ஏற்பட்டிருக்கும். எனினும், தீர்ப்பளிக்கப்பட்ட 15 பேரைத் தவிர, ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படும் முக்கிய பதவிகளில் இருந்தவர்களின் நிலை தொடர்பில் கவலை ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றது. நேற்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட்ட 15 பேரைத் தவிர, தற்போது சிறையில் உள்ள சுரேஷ் சலே மற்றும் பிள்ளையான் ஆகியோருக்கும் சட்டத்தின் முன் உரிய தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
ரணில் மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆட்சிக் காலங்களில் கிடைக்காத தீர்ப்பு தற்போது கிடைத்திருப்பது எங்களுக்கு நிம்மதியை அளிக்கின்றது. அதேபோன்று, ஊழல் தொடர்பான விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான விறுவிறுப்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், அநுர அரசாங்கம் வீழ்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்றார்.
இவ்வாறாக நாட்டில் இடம்பெறும் முக்கிய விடயங்களை சுவாரஸ்யமான அரசியல் தலைவர்களின் கருத்துகள் ஊடாக உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி.
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 200 ஆண்டுகளுக்கு மேல் சிறை - கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு