தலைமன்னாரில் இருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம்
எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம், மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக தலைமன்னாரில் இருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளையும் மக்கள் பார்வையிடுவதற்கான விசேட படகு சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
குறித்த விடயம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் (01.10.2026) மாலை 4.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள், தலைமன்னார் பங்குத்தந்தை, தலைமன்னார் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
படகுப் போக்குவரத்தை ஆரம்பிக்க தீர்மானம்

இதன்போது எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அதிகாரபூர்வமாக சுற்றுலா பயணிகளுக்கான படகுப் போக்குவரத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்குரிய பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அதற்கமைய, குறிப்பிட்ட மணல் தீவுக்கான பயணத்தை 15ஆம் திகதி மேற்கொள்வது என்றும், அதன் பிரகாரம் குறிப்பிட்ட ஒரு படகில் 7 சுற்றுலா பயணிகள் பிரயாணம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வனஜீவராசிகள் திணைக்களம் பயணிகள் ஒவ்வொருவரிடமிருந்தும் 140 ரூபாய் அடிப்படையில் கட்டணத்தை அறவிடுவதற்கும், குறிப்பிட்ட படகு உரிமையாளர்கள் (ஒரு படகில் 7 பேர் பிரயாணம் செய்ய முடியும்) ஒவ்வொரு சுற்றுலா பயணியிடம் இருந்து 2,500 ரூபாய் வீதம் ஒரு படகுக்கு மொத்தம் 17,500 ரூபாய் தொகையை அறவிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்
முதலாவது மணல் தீவில் சுற்றுலா பயணிகள் சென்று நீச்சல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதற்குரிய கட்டணங்கள் மேலாண்மைக் குழு மூலம் தீர்மானிக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தற்பொழுது தீர்மானிக்கப் பட்டுள்ள 17,500 ரூபாய் கட்டணத்துடன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு சொந்தமான 5 தீவுகள் வரை சென்று பார்க்க முடியும்.
மூன்றாவது தீவில் இறங்கி, அதில் தங்கி நின்று குறிப்பிட்ட நேரம் அந்த மணல் தீவினைப் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, 15ஆம் திகதியைத் தொடர்ந்து படகு சேவை ஆரம்பிக்க இருப்பதால், சுற்றுலா பயணிகள் மேலாண்மைக் குழுவுடன் தொடர்பு கொண்டு தங்களுக்கான பயண ஏற்பாடுகளை செய்து, மன்னார் மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு பங்காற்ற முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.