அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் யாழ். பல்கலைக்கு விஜயம்
அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று யாழ். பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளது.
கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும பொருளாதாரத்துக்கான முதல் செயலாளர் கலாநிதி போல் செக்கோலா தலைமையிலான குழுவினரே கடந்த வாரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளனர்.
தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமை
இந்தச் சந்திப்பானது இலங்கையில் அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள கடல்சார் வள மற்றும் கடலோரப் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வுத் திறன் மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கும், அவுஸ்திரேலிய அரசின் உதவிகள் வழங்கப்படக்கூடிய இடங்களை அடையாளங்காணும் வகையிலும் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமைகள் மற்றும் அவுஸ்திரேலிய அரசின் நலன் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், சட்ட விரோத புலம்பெயர்வு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சமூக மட்டச் செயற்றிட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது அவுஸ்திரேலிய அதிகாரிகள் குழுவின் சார்பில், தென் ஆசிய மற்றும் இந்து சமுத்திரக் கடற் பிராந்தியப் பாதுகாப்புசார் விற்பன்னரும், அவுஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழக தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளருமான கலாநிதி டேவிற் பிரேஸ்டர், ரோயல் அவுஸ்திரேலிய கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரியும், புதுடெல்லியில் கடமையாற்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகருமான கப்டன் சைமன் பேட்மன், கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமெண்டா ஜோண்சன் மற்றும் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அத்தியட்சகர் வனேசா ரஃப் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சார்பில், கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம், அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் மற்றும் பொருளியல் துறைத் தலைவர் கலாநிதி கே. கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 18 மணி நேரம் முன்

மியான்மர் நிலநடுக்கம்: லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன? 10,000-ஐ தாண்டுமா பலி எண்ணிக்கை? News Lankasri
