ரணிலின் பாதுகாப்பு அதிகாரி மீதான தாக்குதல்.. வஜிர அபேவர்தன முன்வைத்துள்ள கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது ஊடகவியலாளர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் சுயாதீனமான விசாரணையொன்றை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் ஐக்கிய தேசியக் கட்சி நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விசாரணை தேவை
அவர் மேலும் தெரிவிக்கையில், "நீதிமன்ற விசாரணைக்காக வருகை தந்துவிட்டுத் திரும்பிய முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரி மீது நடத்தப்பட்ட தாக்குதலை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களும் இதனைக் கண்டிக்க வேண்டும். பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இந்தச் சம்பவத்தை ஒரு சிறிய அல்லது தற்செயலான நிகழ்வு எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
அவ்வாறாயின் விசாரணைகள் எவ்வாறு முறையாக முன்னெடுக்கப்படும்? வரலாற்றில் முதன்முறையாக ஊடகவியலாளர் ஒருவர் இவ்வாறான தாக்குதலை நடத்தியுள்ளார் என்று நான் நினைகின்றேன்.
இந்தச் சம்பவம் குறித்துப் பொலிஸ் திணைக்களம் சுயாதீனமான மற்றும் நியாயமான விசாரணையை நடத்தி, இந்தத் தாக்குதலுக்கான உண்மையான காரணத்தைச் சமூகத்துக்கு வெளிப்படுத்த வேண்டும்." என்றார்.