நீண்டகாலத்திற்கு பின்னர் புனரமைக்கப்படும் கோண்டாவில் உள்ளக வீதிகள்
யாழ். கோண்டாவில் இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போவின் நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் இருந்த உள்ளக வீதிகளைப் புனரமைப்பதற்கான பணிகள் நேற்று (01.10.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
குறித்த புனரமைப்புப் பணிகளுக்காக நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சின் 92 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
புனரமைப்புப் பணிகள்
நீண்டகாலமாக உரிய புனரமைப்பின்றிக் காணப்பட்ட டிப்போவின் உள்ளக வீதிகளைச் சீரமைத்து, போக்குவரத்துச் சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர், நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இப்புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் கோண்டாவில் டிப்போவின் அன்றாடச் செயற்பாடுகளை இலகுபடுத்துவதுடன், போக்குவரத்துச் சேவைகளைச் சீராக முன்னெடுப்பதற்கும் டிப்போவின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பணிகளின் ஆரம்ப நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.