வவுனியா- கணேசபுரத்தில் PickMe சாரதி மீது தாக்குதல்: நால்வர் கைது
வவுனியா- கணேசபுரம் பகுதியில் PickMe செயலி மூலம் முச்சக்கரவண்டியை முன்பதிவு செய்த பயணிகள், சாரதியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முச்சக்கரவண்டியில் நால்வர் பயணிக்க வேண்டும் எனப் பயணிகள் வற்புறுத்திய நிலையில், விதிமுறைகளின் படி மூவர் மட்டுமே பயணிக்க முடியும் என சாரதி தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சாரதி தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நால்வர் கைது
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட சாரதிக்கு ஆதரவாக 20க்கும் மேற்பட்ட PickMe சாரதிகள் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரையும் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பின்னர் இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நால்வரும் பொலிஸாரின் கடுமையான எச்சரிக்கையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேர்மையான முறையில் தொழில் செய்து தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வரும் PickMe சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்துகின்றனர்.



