அறுகம்குடாவில் தாக்குதல் முயற்சி: இரகசிய அறிக்கை நீதிமன்றில்
அறுகம்குடாவை (Arugambay) இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதலை நடத்தும் திட்டம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பயங்கவாத எதிர்ப்பு பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
அத்துடன், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அதி இரகசிய அறிக்கையொன்றையும் விசாரணை அதிகாரிகள் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் சமர்ப்பித்துள்ளனர்.
அவசர எச்சரிக்கை
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மேலதிக நீதவான், விசாரணைகளின் மேலதிக முன்னேற்றங்களை நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.
கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி அன்று, இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை, இஸ்ரேலிய குடிமக்கள், தென்னிலங்கையில் உள்ள பிரபலமான சுற்றுலாப் பகுதிகளை உடனடியாக விட்டு வெளியேறுமாறு அவசர எச்சரிக்கையை விடுத்தது.
இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள இஸ்ரேலியர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், பெரிய பொதுக்கூட்டங்களை நடத்துவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இந்தநிலையிலேயே, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படுபவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |