மரபுவழிவந்த கதையினை திரிவுபடுத்தி கலை கலாச்சாரத்தினை அழிப்பது அரசின் திட்டமிட்ட செயல் : என்.எஸ்.மணியம்
முல்லை மணி அவர்கள் எழுதிய பண்டாரவன்னியன் நாடகம் எங்கள் மரபுவழி வந்த கதை இதனை திரிவுபடுத்தி வன்னியில் பலர் புத்தகம் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள் எனவும் இது அரசின் திட்டமிட்ட செயல் என முள்ளியவளை கலைத்தாய் நாடக மன்றத்தின் தலைவர் என்.எஸ்.மணியம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"முல்லை மணி எழுதிய பண்டாரவன்னியன் நாடகம் எங்கள் மரபுவழி வந்த கதை இதனை திரிவுபடுத்தி வன்னியில் பலர் புத்தகம் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். இது அரசின் திட்டமிட்ட செயல் தமிழர்களின் இருப்பினை காலாச்சாரத்தினை அழிப்பதற்கு முயற்சிகள் ஒரு பக்கத்தில் நடந்துகொண்டிருக்கின்றது.
அதேபோல்தான் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற எங்கள் பாரம்பரிய நாட்டுக்கூத்து கலைகளை இல்லாமல் செய்வதற்கு இப்படியானவர்கள் ஊடுருவிக்கொண்டிருக்கின்றார்கள் என்றுதான் நான் கருதுகின்றேன்.
என்.எஸ்.மணியத்தினை போல் ஒரு கூத்து வடிவத்தினை முன்னெடுத்ததில் எனக்கு நிகராக இங்கு யாரும் இல்லை இதனை புரிந்துகொண்டும் என்னை புறந்தள்ளுவதற்காக திட்டமிட்டிருக்கின்றார்கள்.
இவர்கள் எல்லாம் கலையினை அழிப்பதற்கு என்று ஏதோ ஒரு பக்கத்தில் செயற்படுகின்றார்கள் போல் எனக்கு தெரிகின்றது. இவ்வாறு வளரவிட்டால் காலக்கிரமத்தில் எங்கள் கலைகள் அழிந்து போய்விடும் எங்கள் பாரம்பரியங்கள் இல்லாமல் போய்விடும்.
பாரம் பரிய உடைஅலங்காரம் இந்த மண்ணில் இருந்தது. இந்திய அமைதிப்படையினரின் வருகைக்கு முன்னமே இந்த பாரம்பரிய வில்லுடைகள் அழிந்துவிட்டன கூத்தில் முல்லை மோடி என்று சொல்லப்படுகின்றதற்கான ஆதாரம் கூட அழிந்துவிட்டன. நான் சிறுவயதில் இருந்து கூத்தில் ஈடுபட்டவன் என்ற படியால் அழிந்த வில்லுடைகளை கட்டிக்காத்து அதனை வடிவமைத்து இன்று இந்த சந்ததியிடம் கொடுத்தவன் நான் தான்.
நான் அதை கண்டுபிடிக்காமல் தயாரிக்காமல் விட்டிருந்தால் இந்த கூத்தும் இல்லை இந்த உடை அலங்காரமும் இல்லை. உடை அலங்காரத்தில் ஒத்த வடிவமைப்பில் யாரும் உடையினை தயாரிக்கலாம் ஆனால் அந்த அலங்காரங்கள் அந்த திராவிடக் கலைகள் மாறக்கூடாது இதில் ஒவ்வொருவரும் கவனமாக இருக்க வேண்டும்.
முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் மூன்றிற்கு மேற்பட்ட வட்டக்கலரி கூத்துக்கள் அரங்கேறி இருக்கின்றன. கோவேந்தன் கூத்து,கன்னன் கூத்து,கோவலன் கூத்து, இந்த கூத்து எல்லாம் அழிந்து போய்விட்டது. இதன் பின்னர் பண்டாரவன்னியன் நாட்டுக்கூத்தினையும் இந்த மண்ணில் அடுத்த சந்ததிக்கு நான் கொடுக்கவேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு நான் பழக்கிக்கொண்டிருக்கின்றேன்.
கலைப்பயணத்தில் எனக்கு கிடைத்த அத்தனை விருதுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் கிடைத்தது. எனவே எனது கலைத்தாய் நாடகமன்றத்திற்கு முள்ளிவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் நடைபெறும் கோவலன் கண்ணகி நாட்டுக்கூத்தினை கொண்டு நடத்துவதற்கு என்னை புறந்தள்ளியுள்ளமை மிகவும் வேதனையாக இருக்கின்றது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் தொன்று தொட்டு 150 ஆண்டுகளுக்கு மேலாக
கோவலன் கண்ணகி என்ற நாட்டுக்கூத்து மேடை ஏறிவருகின்றது. அண்மை காலத்தில்
போருக்கு பின்னர் இந்த கூத்து இரண்டாக பிளவு பட்டு இரண்டு அணியினரிடம் இந்த
கூத்தினை ஆலய நிர்வாகம் ஒப்படைத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.





அய்யனார் துணை சீரியல் நடிகைக்கு கிடைத்த விருது.. விஜய் டெலிவிஷன் விருது மேடையில் ஸ்வீட் சர்ப்ரைஸ் Cineulagam
