அமெரிக்காவில் இருந்து ஜப்பான் பயணமான ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அமெரிக்க சுற்றுப் பயணத்தை நிறைவுசெய்து கொண்டு அங்கிருந்து ஜப்பான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பொதுச் சபை அமர்வில் முக்கிய உரையொன்றையும் ஆற்றியிருந்ததுடன், சர்வதேசத் தலைவர்கள் பலரையும் சந்தித்திருந்தார்.
ஜப்பான் விஜயம்
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில் , ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்க நேரப்படி செப்டம்பர் 25ம் திகதி பிற்பகலில் ஜப்பான் நோக்கிப் பயணப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஜோன் எப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவர் ஜப்பான் நோக்கிப் பயணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் ஜனாதிபதி, இம்மாதம் 27ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை ஜப்பானில் சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த சுற்றுப் பயணத்தில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத்தும் கலந்து கொண்டுள்ளார்.



