தமிழ் அரசியலை பலப்படுத்த அரசியல் தலைவர்களை தூய்மைப்படுத்த வேண்டும்..!
ஈழத்தமிழர்கள் நீண்ட தொன்மைமிகு பண்பாட்டையும், சமூகக் கட்டுப்பாடுகளையும், ஒழுக்க விழுமியங்களையும் இறுக்கமாக கடைப்பிடிக்கும் ஒழுக்கமிகு மக்கள் கூட்டம்.
அதனால் தான் கடந்த 400 ஆண்டு காலம் இறைமையை இழந்தாலும் அதன் பண்பாடும், பாரம்பரியமும், சமூக ஒழுக்க விழுமியங்களும் இன்னும் மாற்றமடையாது தொடர்ந்து நிலைத்து நிற்கிறது.
இத்தகைய ஈழத் தமிழ் சமூகத்தில் அரசியல் தலைமைகள் கடந்த காலங்களில் அரசியல் ரீதியான தவறுகளை விட்டிருந்தனர். ஆனால் இப்போது சமூக ஒழுக்க விழுமியங்களில் மிகப் பாரதூரமான குற்றச்சாட்டுகள் சில தலைவர்கள் மீது இனம் காணப்பட்டு இருப்பது தமிழ் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது.
அந்த வரிசையில் இப்போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அதுவும் கத்தோலிக்க திருச்சபையால் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஒழுக்கக்கேடான குரல் பதிவுகளும், நடத்தையும் பற்றிய அருவருக்கத்தக்க செய்தி youtube ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் தமிழ் சமூகம் சார்ந்து அதன் பண்பாட்டையும், விழுமியத்தையும் பாதுகாப்பதற்கு தமிழ் சமூக நலன் பிரிவுகளும், கல்விமான்களும், சிவில் சமூகமும், ஊடகவியலாளர்களும் இப்போது பேச வேண்டிய தருணம் உருவாகிவிட்டது. "
தமிழ் சமூகம்
" மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே"" இந்த பாரம்பரியத்தைக் கொண்ட மக்கள் கூட்டம் பின்னாளில் தலைவன் எவ்வழியோ தாமும் அவழி என்ற நிலையில் தமிழ் சமூகம் தன்னை பண்பாட்டு ரீதியில் செழுமைப்படுத்தி வந்திருக்கிறது. ""ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்"

".(குறள் - 131) என திருக்குறள் தமிழர் பண்பாட்டின் மேன்மையின் உச்சத்தை வெளிக்காட்டி நிற்கிறது. ஒழுக்கத்தை உயிரினும் மேலாகவே தமிழர் பண்பாட்டியல் வரலாற்றில் கடைப்பிடிக்கப்படுகிறது. பாலியல் ஒழுக்கத்தை வலியுறுத்தும் இலக்கியமாக சங்கம் மருவிய காலத்தில் எழுந்த சிலப்பதிகாரத்தின் மதுரை காண்டத்தில் “தன் அல்லாத தம்பதியின்மீது கையிட்டால், அரசன் உயிர் தீர்ப்பான்” என பிறர்மனை நயந்தல் மற்றும் பாலியல் வன்முறை என்பன மிகக் கடுமையான குற்றங்களாக கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுவதாக கூறுகிறது.
கி.பி. 9ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை சோழ மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் சமூக ஒழுக்கம், குடும்ப கட்டுக்கோப்பு, மரபுகள், வழக்காறுகள் என்பன அரசனின்னால் மிகக் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பாலியல் வல்லுறவு, மற்றும் பிறர்மனை நயந்தல், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என்பவற்றிற்கு “மரண தண்டனை” வழங்கப்பட்டது.
சோழர் மன்னர்கள் இதனை அரச நியாயமாக ஏற்றுக் கைக்கொண்டனர். இதனை உத்தரமெரூர் கல்வெட்டுகள் (10-ஆம் நூற்றாண்டு) “அன்னிய ஸ்த்ரீஸங்கமம்” (அதாவது பிறர்மனை நயந்தல்) குற்றத்துக்கு உயிர்த்தண்டனை வழங்கப்பட்டது என அந்தக் கல்வெட்டு வரலாற்றுச் சான்றாக உள்ளது. 10ஆம் நூற்றாண்டு பராந்தக சோழர் காலம் காஞ்சிபுரம் மாவட்ட உத்தரமெரூர் கல்வெட்டு( Epigraphia Indica, Vol. II, Tamil Inscriptions No. 205.) “கிராம சபை தீர்ப்பின்படி, தன்னைச் சாராத ஸ்த்ரீயோடு சங்கமித்தவன் உயிர்த்தண்டனைக்கு உட்படுத்தப்படுக.” என்ன பொறிக்கப்பட்டுள்ளது.
அதாவது பிறர்மனை நயந்தவருக்கு மரண தண்டனை வழங்கப்படும் எனக் குறிப்பிடுகிறது. இதுவே சோழர் காலத்தில் “சமூக ஒழுக்கம் காக்கும் நியாயச் சட்டம்” எனச் சொல்லப்படுகிறது. அவ்வாறே பெரியபுராணம் மற்றும் கலிங்கத்து பரணி போன்ற நூல்களிலும் பாலியல் வன்புணர்வு பிறர்மனை நயத்தல் குற்றங்களுக்கு மன்னர்கள் கடுமையான உயிர் ஒறுத்தல் தண்டனை வழங்கினார்கள் என சொல்கின்றன.
“அரசனின் நீதியால் சமுதாய ஒழுக்கம் நிலைக்கும்” என சோழநாட்டு தமிழ் சமூகம் நம்பிக்கை கொண்டிருந்தனர். அதேபோல கி.பி 12ம் நூற்றாண்டு குலோத்துங்க சோழர் வீரத்தைப் புகழும் பாடல்களான கலிங்கத்து பரணியின் 8–9ஆம் அடிகள் “அன்னியர் தாமரை நயந்தவர் தாமும் உயிர் இழப்பார் என அரசன் கூறினான்.” என அமைந்துள்ளது.
இது சோழர் காலத்தில் நிலவிய நீதி நியமத்தின் நடைமுறை வடிவம் ஆகும். சோழர்கள் இதனை “ராஜநியாயம்” என நடைமுறையில் கொண்டு வந்தனர். இவ்வாறே 15ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராட்சியத்தின் ஆரிய சக்கரவர்த்திகள் வியாபாரத்திற்காக வந்த அராபியர்களையும், சீனர்களையும், ரோமானியர்களையும் இரவு வேலைகளில் நாட்டில் உட்புறத்தில் தங்குவதற்கு அனுமதிக்கவில்லை.
அவர்களை கடற்கரையோரத்தில் அமைந்த சுங்கப் பகுதியிலேயே தங்க அனுமதித்ததும் இனக்கலப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்கு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில்தான் தமிழ் சமூகம் "கிடுகுவேலி சமூகம்" என அதாவது இளம் பெண்கள் உள்ள வீடுகளை வெளியிலிருந்து பார்க்காதவாறு தென்னை பனை ஓலைகளினால் மறைப்புக் கட்டி வாழும் சமூகமாக வாழ்ந்திருக்கிறது.
பல்வேறு குற்றங்கள்
இன்றைய நவீன உலகில் மனித உரிமைகள், ஜனநாயகம், சமத்துவம் என பலவாறாக பேசினாலும் ஒவ்வொரு நாடுகளும் தமது சமூக பண்பாட்டு விழிமியங்களுக்கு கூடாகவே அந்தந்த நாட்டுக்குரிய சட்டங்களும் நடைமுறைகளும் உள்ளன. இதனை லண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் உலகளாவிய மனித உரிமை அமைப்பான Amnesty International ன் 2023ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி உலகின் 195 நாடுகளில் 79 நாடுகளில் இன்னும் மரண தண்டனையை சட்டத்தினுடாக நடைமுறையில் வைத்துள்ளனர் என்கிறது.

இவற்றில் பெரும்பாலான நாடுகளில் குழந்தை மீதான பாலியல் வன்முறை, பலர் சேர்ந்து செய்யும் வன்முறை (gang rape) போன்றவற்றால் உயிரிழப்பு ஏற்பட்டால் இவை போன்ற குற்றத்திற்கு மட்டுமே மரண தண்டனை வழங்கும் நாடுகளாக உள்ளன என கூறுகிறது. அதே நேரம் உலகின் 30 நாடுகளில் “ சிறுவர் பாலியல் துஸ்பிரியோகம் மற்றும் பாலியல் வன்முறைக்கு மரண தண்டனையை அரசியல் சாசன சட்டமாக கொண்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அத்தோடு சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை வழங்கும் நாடுகள் என ஈரான், சவுதி அரேபியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அஃப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, சூடான், சீனா, வட கொரியா, சிங்கப்பூர் ஆகியவை முக்கியமானவை என குறிப்பிடுகிறது. இத்தகைய உலகளாவிய பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் நடைமுறை நிலவும் இன்றைய உலகச் சூழலில் உலகின் மொத்த ஜனத்தொகையில் 65 விகித மக்கள் இத்தகைய சட்டத்தின் கீழேயே வாழ்கிறார்கள் என்பதை நாம் கருதி கொள்ள வேண்டும்.
இத்தகைய கடுமையான சட்டங்கள் மனிதகுல மாண்பையும், சமூக நீதியையும், ஆண் பெண் சமத்துவத்தையும் நிலைநாட்டுவதற்கும், மனிதக் குழுமத்தின் மனிதப்பண்பை மேம்படுத்துவதற்காகவே நடைமுறையில் உள்ளன என்பதுதான் எதார்த்தம். இன்றைய உலகச் சூழலில் தமிழ் சமூகத்தின் பண்பாடு அழிக்கப்பட்டால் அல்லது சிதைக்கப்பட்டால் தமிழ் சமூகம் தனது சமூக பெறுமானத்தை இழந்து அழிந்துவிடும்.
பண்பாட்டுச் செல்வமிக்க தமிழ்த் தேசிய இனம் தாம் இழந்துபோன இறைமையை மீட்பதற்காக ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தபோது பல்வேறுபட்ட ஆயுத இயக்கங்கள் தோற்றம் பெற்றன. அவ்வாறு தோற்றம் பெற்ற இயக்கங்களில் ஒழுக்கம் முதன்மையாக கடைப்பிடிக்கப்பட்டது. ஒழுக்கம் குன்றிய இயக்கங்கள் இல்லாத ஒளிந்து போயின.
அந்த அடிப்படையில் கடந்த 30 ஆண்டு காலமாக தமிழர் இறைமைக்காக போராடிய போராளிகள் முள்ளிவாய்க்கால் பேரவலம் வரைக்கும் பாலியல் ஒழுக்கத்தை மிகத் தூய்மையாகவும் இறுக்கமாகவும் கடைப்பிடித்தனர்.
போர்க்களத்தில் ஒரு பெண் போராளி மரணம் அடைந்தால் அவரின் வித்துடலை எதிரி அலங்கோலப்படுத்தி அசிங்கப்படுத்தக்கூடாது, அது எங்கள் இனத்திற்கு அவமானம் என்று கருதி மரணித்த பெண் போராளியின் உடலை மீட்பதற்காகவே சண்டையிட்டு பல ஆண்போராளிகள் மரணித்து பெண் போராளியின் உடலத்தை மீட்டு வந்த போர்க்களங்கள் பலவற்றை எங்கள் தாய்மண் கண்டிருக்கிறது. அத்தகைய பெண்களின் மானத்தை காத்த எங்கள் மண்ணில் இன்று மக்களின் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்களால் பெண்கள் துஸ்பிரியோகம் செய்யப்படுவது என்பது மன்னிக்கப்பட முடியாத குற்றமாகும்.
தொலைத் தொடர்பாடல்
விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் பாலியல் குற்றங்களுக்கும் குறிப்பாக சிறுவர் பாலியல் குற்றம் மற்றும் பாலியல் வன்புணர்வு போன்றவற்றிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட பின்னர் கடந்த 16 ஆண்டுகளில் தமிழ அரசியல் பரப்பில் தோற்றம் பெற்ற அரசியல் தலைமைகள் பல்வேறு குற்றச்சாட்டுக்கு உட்பட்டிருக்கிறார்கள், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கும் முற்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் ஆதாரபூர்வமாக யாருடைய பாலியல் குற்றங்களும் நிரூபிக்கப்படவில்லை.

ஆனால் இப்போது ரெலோ இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மீது இந்த பாலியல் குற்றச்சாட்டு சமூக வலைத்தளங்கள், மற்றும் செய்தி ஊடகங்கள் ஊடாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஆதாரங்களாக செல்வம் அடைக்கலநாதனின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
அந்தக் குரல் பதிவுகள் அனைத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதனுடையது என்பது அனைவருக்கும் தெரிந்த பரகசியம் ஆகிவிட்டது. மேற்குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் ஒழுக்க கேட்டினாலும், தவறான பாலியல் நடத்தினாலும், தனது பாலியல் இச்சையை தொடர்ந்து பேணுவதற்காக ஒரு அப்பாவி இளைஞன் மீது கொலை மிரட்டலை தொலைபேசி உரையாடலின் மூலம் விட்டிருக்கிறார்.
அதன் பின்னர் அந்த இளைஞன் மரணமடைந்திருக்கிறார் அந்த மரணம் தற்கொலை என போலீசார் குறிப்பிடுகின்றனர். ஆனால் பெரும்பாலான விடயம் அறிந்த வட்டாரங்கள் அது கொலை என்றே குறிப்பிடுகின்றனர். இங்கே அது தற்கொலையா? அல்லது கொலையா? என்ற விவாதத்தை கடந்து அந்த இளைஞனின் மரணத்திற்கு காரணம் இந்த வயோதிப காமக்கொடூரனின் பாலியல் இச்சையும், அந்தப் குறித்த இளம்பெண் மீது கொண்ட மோகமும், அதற்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கையும்தான் மேற்படி இளைஞனின் மரணத்துக்கு காரணம் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவிலிருந்து "" நான் 15 வருஷமாக உறவில் இருக்கிறேன்" " என அவர் குறிப்பிடும் குறித்த பெண் பெண்ணுக்கு இப்போது 30 வயது மட்டுமே. அப்படியானால் அவருடைய கூற்றில் இருந்து இவர் 15 வயதைச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. மரணம் அடைந்த இளைஞன் மன்னார் ஆயருடன் மூன்று வழி தொலைத்தொடர்பாடல் மூலம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டி உள்ளார்.
ஆகவே மன்னார் ஆயருக்கும் மரண அடைந்த இளைஞனுக்கும் இன்னும் ஒருவருக்குமான உரையாடல் அதாவது மூன்றாம் தரப்பினுடான உரையாடல் இடம்பெற்றதிலிருந்து இந்த உரையாடலை மன்னார் ஆயர் இல்லம் மறுக்க முடியாது. இந்நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லம் தமிழ் மக்களின் நீதிக்காகவும், மக்களின் சமூகமான நல்வாழ்வுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் யுத்த காலத்தில் பெரும் சேவையாற்றியுள்ளது.
மறைந்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அடிகளார் மக்களுக்காக யுத்த வளையத்துக்குள் தன் உயிரை பணயம் வைத்து சென்று வந்த புனிதர். அத்தகையருடைய வெற்றிடத்திற்கு வந்திருக்கும் இன்றைய ஆயர் இந்த ஒழுக்கக்கேடான அநீதியான சம்பவம் பற்றி ஏன் இன்னும் திருவாய் மலர்ந்தருளவில்லை? என்பது மக்கள் மத்தியில் பெருத்த சந்தேகங்களையும் விசனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஒழுக்க கேடான சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் மீது இவர்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை? தேர்தல் காலங்களில் இவருக்காக பல பாதிரியார்கள் மக்களிடம் சிபாரிசு செய்து இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் இவரை கேள்வி கேட்கும் தர்மேக உரிமை மன்னர் திருச்சபை பாதிரிமார்களுக்கு உண்டு என்பதையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.
நீதிக்கான போராட்டம்
அதேபோல தமிழ் மக்களின் அரசியல் பரப்பில் இறைமைக்காகவும், நீதிக்காகவும் போராடும் மக்கள் கூட்டத்தில் சமூக விரோத செயல்களுக்கும் தனிப்பட்ட ஒழுக்கக்கேடான செயல்களுக்கும் நீதி கேட்கவும், கேள்வி கேட்கவும் யாரும் இல்லாவிட்டால் இந்த இனத்திற்கு எப்படி விடுதலை கிடைக்கும்? எப்படி நீதி கிடைக்கும்?
நீதிக்காக போராடுபவர்கள் ஒழுக்க சிலர்களாக இருக்க வேண்டும். ஒழுக்கமில்லாதவன் எப்படி நிதிக்காக போராட முடியும்? ஆகவே இத்தகைய ஒழுக்க கேடுகள் களையப்பட வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மீதான குற்ற விசாரணை சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும், மதரீதியாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தமிழ் சமூகத்தின் விருப்பாக உள்ளது. ஒழுக்க கேடான சமூக விரோதச் செயலில் ஈடுபட்டிருக்கும் ஒருவரை தலைவனாக கொண்டு ஒரு இயக்கம் இயங்க முடியாது. சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் ஒரு பன்றியோ, கழுதைப்புலியோ தலைமை தாங்க முடியாது.
ரெலோ இயக்க முக்கியஸ்தர்கள் மற்றும் அந்த இயங்கத்தின் வெளிநாட்டு கிளைகள் இதனை ஏன் விசாரணைக்கு உட்படுத்தவில்லை? இதனை விசாரணைக்கு உட்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை நிருபராதியாக நிரூபிக்கும்வரை அவரை தற்காலிகமாக தலைவர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்வதை முதலாவது நடவடிக்கையாக செய்திருக்க வேண்டும்.
அதை ஏன் இன்னும் நடைபெறவில்லை? அவ்வாறே செல்லோ அங்கத்துவம் வகிக்கும் கூட்டணி கட்சியிலும் இத்தகைய கேள்விகள் ஏன் எழவில்லை? அவர் நாடாளுமன்றம் சென்ற கட்சியான ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினரின் தகாத, ஒழுக்க கேடான செயலுக்கு ஏன் விளக்கம் கோறவில்லை? ஒருவேளை நாடாளுமன்ற உறுப்பினர் குற்றவாளியாக கருதப்பட்டால் அல்லது நிரூபிக்கப்பட்டால் அவரை பதவி நீக்கம் செய்வதற்கான சட்ட ஒழுங்கு உண்டு அதனை மேற்படி கட்சி நிறைவேற்றுமா? நல்லொழுக்கமுள்ள சமூகமே இந்த பூமி பந்தல் நிலைத்து வாழும்.
தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை அடைவதற்கான அரசியல் போராட்டத்தில் ஒவ்வொரு தலைவர்களும் சுய ஒழுக்கம் உள்ளவர்களாக, சீரிய சிந்தனையும், நற்பண்பும் நிறைந்தவர்களாக, சமூகப் பொறுப்புள்ளவர்களாக இருந்தால் மாத்திரமே தமிழ் தேசிய இனத்தை அவர்களால் வழிநடத்திச் செல்ல முடியும். அத்தகைய தலைவர்களையே தமிழ் தேசிய ஆன்மா தேடிக் கொண்டிருக்கிறது.
நல்லொழுக்கமும், நன்மனப்பாங்கும் விடுதலை உணர்வுமிக்க தமிழ்த் தேசியவாதிகளை உருவாக்குவது தமிழ் மக்களின் கைகளிலேயே உள்ளது. மக்கள் தங்கள் கைகளினால் வேடதாரிகளையும் தன்னின உன்னிகளையும், ஒழுக்கக் கேடனவர்களையும், சமூகவிரோதிகளையும் துரத்திய அடிப்பதே இன்றைய காலத்தின் தேவையாகும் அதுவே தமிழ் தேசிய கட்டுமானத்திற்கான அடித்தளத்தை மறு சீரமைப்பு செய்வதற்கான ஒரே வழியாகவும் அமையும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 10 November, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan