2011 போருக்குப் பிறகு முதல்முறையாக அந்தோனியோ குட்டேரஸ் சிரியா பயணம்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் சனிக்கிழமை சிரியாவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார்.
2011ஆம் ஆண்டு சிரியாவில் போர் தொடங்கிய பிறகு, பதவியில் இருக்கும் ஐ.நா. தலைவர் ஒருவர் அந்நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.
அந்தோனியோ குட்டேரஸ்
சிரியாவில் கடந்த 2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், கிளர்ச்சியாளர்களின் தீவிரப் போராட்டத்தைத் தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி பஷார் அல்-அசாத் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

அதன் பிறகு அமைக்கப்பட்ட இடைக்கால அரசின் கீழ், உலக நாடுகளுடனான உறவைச் சிரியா மீண்டும் புதுப்பித்து வரும் சூழலில் இந்த விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னாள் தீவிரவாத அமைப்பின் தலைவராகவும், 2025 நவம்பர் வரை ஐ.நா.வின் தடைப்பட்டியலில் இருந்தவருமான தற்போதைய சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷாராவை குட்டேரஸ் நேரில் சந்தித்துப் பேசுகிறார்.
அத்துடன், சிரிய வெளியுறவுத்துறை அமைச்சர் அசாத் அல்-ஷைபானி, பிற அரசு அதிகாரிகள் மற்றும் சிரிய சமூகப் பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.
பெரும் கவனம்
சிரியா போரிலிருந்து மீள்வது மட்டுமன்றி, அனைத்து மக்களுக்கும் அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதற்கான வாய்ப்பை இந்நாடு பெற்றுள்ளது என்பதை குட்டேரஸ் தனது பயணத்தின் போது வலியுறுத்துவார் என ஐ.நா. செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை சிரியாவின் புதிய நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ள குட்டேரஸ், இஸ்ரேல்-சிரிய எல்லைப் பகுதியில் அமைதியைப் பராமரித்து வரும் ஐ.நா. அமைதிப் படையினரையும் நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அசாத் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பிறகு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் சிரியா மீதான தடைகளைத் தளர்த்தி வரும் வேளையில், ஐ.நா. தலைவரின் இந்த சிரிய விஜயம் சர்வதேச அளவில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.