பாதாள உலகக்குழு குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த பொலிஸ் அதிகாரி! மனைவி தொடர்பில் வழக்குத்தாக்கல்
நாட்டை உலுக்கிய பிரபல பாதாள உலகக்குழு தலைவர்கள் பலரை கைது செய்த உயர் பொலிஸ் அதிகாரியொருவர், தனது மனைவியினால் வீட்டு வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கு அண்மையில் தலைமை தாங்கிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு நீதிமன்றின் உதவியை நாடியுள்ளார்.
வீட்டு வன்முறை தொடர்பாக வழக்குத்தாக்கல்
குறித்த உயர் பொலிஸ் அதிகாரி, தனது மனைவிக்கு எதிராக தொடர்ந்த வீட்டு வன்முறை வழக்கு தொடர்பாக அவரது மனைவி நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ உரைகளை சமர்ப்பித்துள்ளார்.

தனது மனைவியிடமிருந்து தனக்கும் தனது குழந்தைகளுக்கும் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைச்செயல்கள் காரணமாக பாதுகாப்பு உத்தரவை வழங்குமாறு குறித்த பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
தான் பணிபுரியும் இடத்திற்கு வந்து இடையூறு விளைவிப்பது, தேவையற்ற தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு தொந்தரவு செய்வது மற்றும் பல்வேறு அச்சுறுத்தல்களை விடுப்பது போன்ற காரணங்களால் தான் கடுமையான உளவியல் மற்றும் சுகாதார ரீதியிலான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த பொலிஸ் அதிகாரியின் மனைவி, கணவரால் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார்.
நீதிமன்றில் எழுத்துப்பூர்வ கடிதம் தாக்கல்
இது தொடர்பில் தனது சட்டத்தரணி ஊடாக எழுத்துப்பூர்வ விளக்கத்தை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
இது ஒரு வீட்டு வன்முறை அல்ல என்றும், கணவரின் அதிகப்படியான பணிச்சுமை மற்றும் குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்காமை போன்ற காரணங்களை அடிப்படையாகக்கொண்ட ஒரு சாதாரண குடும்பத்தகராறு மட்டுமே என்றும் மனைவியின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளரார்.
பொலிஸ் அதிகாரி குறிப்பிடுவது போன்ற வன்முறைச்சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை உறுதிப்படுத்த எந்தவொரு மருத்துவ அறிக்கையோ அல்லது சுயாதீன சாட்சியங்களோ சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் மனைவியின் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய, தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தற்காலிக பாதுகாப்பு உத்தரவை இரத்து செய்யுமாறு அவர் நீதிமன்றத்திடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள இணைய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த உயர் பொலிஸ் அதிகாரியின் தரப்பிலிருந்து இந்த விவகாரம் தொடர்பில் இதுவரையில் அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.