கோப் குழுவுக்கு புதிய அதிகாரங்களை வழங்குவதற்கான சட்டத்திருத்தம் முன்வைப்பு
கோப் குழு என்றழைக்கப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (Cope) வுக்கு புதிய அதிகாரங்களை வழங்குவதற்கான சட்டத் திருத்தம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கோப் குழுவின் விசாரணைகளில் வெளிவரும் பாரதூரமான நிதி மோசடிகள் அல்லது ஊழல்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பான நிலையியற் கட்டளையில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீரவினால் இந்த திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடிகள்
அதன்படி 137 ஆவது நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைய குறித்த குழு தொடர்பில் தற்பொழுது காணப்படும் 120(4) நிலையியற் கட்டளையைத் திருத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
கணக்காய்வாளர் நாயகத்தினால் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்குச் சமர்ப்பிக்கப்படுகின்ற அறிக்கைகளைப் பரிசீலிக்கும் போது பாரதூரமான நிதி மோசடிகள் அல்லது ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக குழு தீர்மானிக்குமானால் அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதன் மூலம் வாய்ப்புக் கிடைக்கும்.
எதிர்கால நடவடிக்கைகள்
அத்தகைய சம்பவங்களை நேரடியாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு அல்லது பொலிஸ்மா அதிபருக்கு கோப் குழுவினால் சமர்ப்பிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய குறித்த தீர்மானத்தை ஆராய்வதற்காக நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவுக்கு முன்வைக்கப்ப்பட்டு எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



