ராஜபக்ச காலத்தில் உருப்பெற்ற பாதாள உலகத் தலைவர்கள் : பொன்சேகா சுட்டிக்காட்டு
தற்போது பாதாள உலகில் ஆதிக்கம் செலுத்தும் தலைவர்கள் அனைவரும் ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டவர்கள் எனவும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதாள உலகச் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால் அவை நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று(1.0.202) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புலம்பெயர் அமைப்புகள் தொடர்பான கூற்றுகள்
நாளுக்கு நாள் பாதாள உலகச் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன எனவும், இவை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இவ்வாறான செயற்பாடுகள் நிச்சயமாகக் கட்டுப்படுத்தப்பட்டு நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அழுத்தம் அதிகரிக்கும் போது இவர்களின் செயற்பாடுகளும் மேலும் அதிகரிக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போதைய அரசு ஆர்வத்துடன் செயற்படுகின்றது என்று நான் கருதுகின்றேன். அது குறித்து நாம் மகிழ்ச்சியடைய முடியும். சில நபர்கள் குறித்து நான் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தேன். தற்போது மீண்டும் அதே நபர்கள் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றன.
இந்த விசாரணைகளில் விரைவில் நல்ல முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கைகள் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் தேவைக்கேற்ப அல்லது தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்கேற்ப மேற்கொள்ளப்படுகின்றன என்று சிலர் கூறுவது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், புலம்பெயர் அமைப்புகள் தொடர்பான கூற்றுகள் வெறும் பேச்சுக்காகப் பேசப்படும் விடயங்களே என்றார்.
மேலும், பேராயர் மல்கம் ரஞ்சித் தனது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோருவதற்கு முழுமையான உரிமை உள்ளது என்றும், அரசு இதுவரையில் சரியான பாதையிலேயே செல்கின்றது எனத் தான் கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த அரசு
ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பான விடயங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், ஷிராந்தி ராஜபக்ச வெளிநாட்டுக்குச் சென்றிருப்பது தொடர்பிலும் பேசப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.

ராஜபக்ச குடும்பத்தின் ஒட்டுமொத்த பரம்பரையும், தந்தைகள், மாமன்மார்கள், மூத்தவர்கள், மருமகன்கள் மற்றும் மகன்கள் உள்ளிட்ட பலரும் நாட்டைச் சூறையாடியதாகத் தான் முன்னர் கூறியுள்ளதை நினைவுபடுத்திய அவர், அவர்கள் செய்த செயல்கள் தொடர்பில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
ஷிராந்தி ராஜபக்ச தொடர்பிலும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், சட்டவிரோதமாகப் பணம் தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தால் அதற்கும் அவர்கள் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
2029 ஆம் ஆண்டு நாட்டை நாமல் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்க வேண்டும் என யாராவது நினைத்தால், அது நாட்டில் எவரும் விரும்பக்கூடாத முட்டாள்தனமான செயலாகும் எனக் குறிப்பிட்ட சரத் பொன்சேகா, அவர் செல்ல வேண்டிய பாதை அவருக்குத் திறந்தே இருக்கின்றது எனவும், அவர் விரைவாக அந்தப் பாதையில் செல்வார் எனவும் விமர்சித்தார்.
தற்போதைய அரசுக்கு இன்னும் மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலம் உள்ளது எனவும், நீண்டகாலமாக வீழ்ச்சியடைந்த நாட்டை ஓரிரு வருடங்களில் எந்த அரசாலும் முழுமையாகக் கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே, மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த அரசுக்கு அதன் ஐந்து வருட கால முழுமையான அவகாசத்தை வழங்க வேண்டும் எனவும், அந்தக் காலப்பகுதியில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அவர்களின் பொறுப்பாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.