அடுத்த 4 ஆண்டுகளுக்கு IMF திட்டத்தை தொடர வேண்டும் : அலி சப்ரி
சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை குறைந்தபட்சம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்காவது தற்போதைய அரசு தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட கருத்து என்று முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
அரசின் எதிர்கால முடிவு
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை மற்றும் அதன் தொடர்ச்சியான வேலைத்திட்டங்கள் குறித்து தற்போதைய அரசு எதிர்காலத்தில் எவ்வாறான முடிவை எடுக்கும் என்பது எனக்குத் தெரியாது.
எனினும், நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழலைக் கருத்திற்கொண்டு, இன்னும் குறைந்தபட்சம் 4 ஆண்டுகளுக்கு அந்தத் திட்டத்துடன் தொடர்ந்தும் பயணிப்பதே நாட்டுக்குப் பலன் தரும் செயலாகும்.

எனினும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசின் ஆட்சியின் கீழ் நாட்டின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு மிகக் குறைந்த மட்டத்திலேயே (ஒரு வீதம் மாத்திரமே) அதிகரித்துள்ளதாகத் தெரிகின்றது.
அதேவேளை, நாட்டுக்குத் தேவையான அளவில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் ஈர்க்கப்படுவதற்கான சாதகமான சூழலும் தற்போது வெளிப்படையாகத் தெரியவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.