காணாமல்போன கடற்றொழிலாளர்களை தேட வான்படையினரை ஈடுபடுத்த அவசர நடவடிக்கை
முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பரப்பில் சீரற்ற வானிலை காரணமாக காணாமல்போன மூன்று கடற்றொழிலாளர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுளள்ன.
இதற்படி, கடற்படையுடன் இணைந்து இலங்கை வான்படையின் உலங்கு வானூர்தியையும் (Helicopter) இன்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவசர நடவடிக்கை
2026, அக்டோபர் 26 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் MLT/1742 என்ற இலக்கமுடைய படகில் கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று கடற்றொழிலாளர்கள் கரைதிரும்பவில்லை.

அந்தோணி ஜூட் (வயது 26) அம்பலவன்பொக்கணை, முல்லைத்தீவு ஸ்ரீ புஷ்பராஜா (வயது 42) யாழ்ப்பாணம் மற்றும் முகம்மட் ரிஸ்வான் (வயது 48) மன்னார் ஆகியோரே காணாமல்போயுள்ளனர்.
கடலில் நிலவும் கொந்தளிப்பான வானிலை தேடுதல் பணிக்கு சவாலாக உள்ளதால், வான்வழி தேடுதலை முடுக்கிவிடுமாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு, கடற்படை, வான் படை, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு ஆகியவை இணைந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகின்றன.