நிதி குறைப்பால் உலகளவில் 10 இலட்சம் பெண்களுக்கான உதவிகள் முடக்கம்! ஐ.நா. கவலை
உலகளவில் சர்வதேச நாடுகளின் நிதி ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால், கடந்த 18 மாதங்களில் மட்டும் சுமார் ஒரு மில்லியன் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான உயிர் காக்கும் அடிப்படை உதவிகள் முடங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
பெண்களுக்கான அமைப்புகளிடம் உதவி கேட்டு வருவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் அதிகரித்துள்ள போதிலும், போதிய நிதியின்மையால் 90 சதவீத அமைப்புகளால் அவர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியவில்லை என ஐ.நா.வின் மகளிர் அமைப்பான 'யு.என். வுமன்' வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் அமெரிக்கா முன்னணியில் இருந்த நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு பல பில்லியன் டொலர் மதிப்பிலான வெளிநாட்டு நிதியுதவிகளை அதிரடியாகக் குறைத்தது.
அடிப்படைச் சேவை
மேலும், வெளிநாட்டு உதவிகளுக்கான 'யுஎஸ்ஏஐடி' அமைப்பு கலைக்கப்பட்டதால், அமெரிக்காவின் உலகளாவிய உதவிகள் 50 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்தன. அமெரிக்காவைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற பிற முக்கிய நன்கொடை நாடுகளும் தங்களின் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடி மற்றும் பாதுகாப்புச் செலவின அதிகரிப்பு காரணமாக நிதியுதவிகளைக் குறைத்துள்ளன.
கொங்கோ, ஹைட்டி, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 52 நாடுகளில் செயல்படும் 855 பெண்கள் அமைப்புகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், போதிய நிதியின்றி 40 சதவீத அமைப்புகள் அடுத்த ஓராண்டுக்குள் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ மூடப்படும் அபாயத்தில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்த நிதி நெருக்கடியால் போர் சார்ந்த பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள், இடம்பெயர்ந்த தாய்மார்கள் மற்றும் பாடசாலைப் படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமிகள் ஆகியோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கடந்த ஓராண்டில் இருமடங்காக அதிகரித்துள்ள போதிலும், 62 சதவீத அமைப்புகளால் பெண்களுக்குப் பாதுகாப்பான இடங்களையோ அடிப்படைச் சேவைகளையோ வழங்க முடியாத அவலநிலை உருவாகியுள்ளது.