சுவிட்சர்லாந்தில் இறந்த இலங்கை தமிழர்கள் சாம்பல் கரைப்பது தொடர்பில் அரசின் முடிவு (Photos)
சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாநில அரசு, அங்கு அமைந்துள்ள நடுவனரசு ஆறே ஆற்றில் சைவநெறிக்கூடம் ஊடாக தமிழர்கள் சாம்பல் கரைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பல வேண்டுகோளுக்கு பின் கடந்த (17. 10. 2023) பேர்ன் ஊராட்சிமன்றம் இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.
இதனை சாத்தியமாக்க உழைத்த 4 சுவிட்சர்லாந்து நாட்டவர்களுக்கும் தமிழ்மக்கள் சார்பாளர்களால் நேற்று (20.11.2023) நன்றி தெரிவிக்கும் வகையில் விருந்து வழங்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தில் பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள சைவநெறிக்கூடம் - அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் கருவறையில் தமிழ் வழிபாட்டினை ஆற்றி நிற்க்கும் தமிழ் கோவில் ஆகும்.
செந்தமிழ் திருமறையில் கருவறையில் தமிழ் வழிபாட்டுடன் பெண்களையும் அருட்சுனையர்களாக கொண்டுள்ள சீர்திருத்த மீளெழுச்சி சைவத்தினை சைவநெறிக்கூடம் மேற்கொண்டு வருகின்றது.
பல்லினப் பல்பண்பாட்டு மக்களுடன் பொதுநலத்திட்டங்கள் முன்னெடுக்கும் சைவநெறிக்கூடம், பிறப்பு முதல் இறப்பு வரையான அனைத்துச் சடங்குகளையும் தமிழில் ஆற்றிவருகின்றது.
1980 முதல் தமிழர்கள் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு புலம்பெயரத் தொடங்கி தற்போது 2023ல் 60000 மேற்பட்ட தமிழர்கள் சுவிசில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒருவர் இறந்தபின்னர் ஆற்றப்பட வேண்டிய சமயச்சடங்கிற்கு சைவத்தமிழ் மக்கள் சுவிசில் பல கடினங்களை எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
குறித்த காலத்தில் ஈமைச்சடங்கினை ஆற்றக்கூடிய சைவசமய குருவினை பெற்றுக்கொள்வதும் நடைமுறையில் தற்போது கடினமாக உள்ளநிலையில் சுவிட்சர்லாந்து இந்து - சைவத்திருக்கோவில்கள் ஒன்றியத்திடம் இதற்கான தீர்வு பெறுவதற்கு வேண்டுகோளையும் பொது அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த கோவிட் பெருந்தொற்றுக்காலத்தில் பல இறப்புக்கள் சுவிசில் நடக்கும்போது சமயக்குருவினை இறுதிச்சடங்கு நடாத்திவைக்கப்பெறுவதில் பெரும் கடினம் நிலவியது.
அவ்வேளை சைவநெறிக்கூடம் தனது வளத்திற்கு ஏற்ப இறுதிச்சடங்குகளை ஆற்றியிருந்தது. அக்காலத்தில் இறந்தவர்களின் நீறினை (சாம்பலை) நீரில் கரைப்பது மேலும் கடினமாக இருந்தது.
இக்காலத்தில் ஏற்பட்ட பட்டறவின் பயனாக 2022ல் பேர்ன் மாநில அரசிடம் சைவநெறிக்கூடம் சைவ மற்றும் இந்துக்களின் இறுதிச்சடங்கிற்குப்பின்னர் சுவிசில் பேர்ன்நகரில் சாம்பல் கரைக்க அரச ஒப்புதலுக்காக பல சுவிட்சர்லாந்து அதிகாரிகள், சமயத் தலைவர்களை நாடியிருந்தது.
இவ்வேண்டுகையினை சைவநெறிக்கூடம் விடுத்தபோது இதற்கு வல்ரெல் கிளொசெர் (முன்னைநாள் பேர்ன் நகரசபை பசுமைத்திட்டத்தலைவர்), தாவித் லொயிற்வில்லெர் (பேர்ன் மாநில அரசின் சமயவிவகார பணிப்பாளர்), யன் புக்ஸ் (அரசவிஞ்ஞான தொழிற்பாட்டாளர்), அல்பேர்ட் றீடெர் (சமூகப்பணியாளர், பல்சமய இல்லத்தில் முன்னைநாள் நிர்வாக உறுப்பினர்) ஆகியோர் தமது அதிகாரங்களைத்தாண்டி தமிழ்மக்களுக்கா உழைத்திருந்தனர்.
முதலில் ஊராட்சி மன்ற, பின்னர் மாநில அரச, நிறைவில் நடுவன் அரச தலைவர்கள், அரசியல்வாதிகளை நேர்கண்டு, சைவத்தமிழர்களின் தேவை விளக்கப்பட்டது.
2 ஆண்டுகளில் பல அதிகாரிகளையும் தலைவர்களையும் நேர்கண்டு, பேர்ன் நகரில் ஆறேநதியில் சாம்பல் கரைப்பதற்கு ஒப்புதல் வழங்க சைவநெறிக்கூடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
பல வேண்டுகோளுக்கு பின் கடந்த 17. 10. 2023 பேர்ன் ஊராட்சிமன்றம், பேர்ன் மாநில அரசு, சுவிட்சர்லாந்து நடுவனரசு ஆறே ஆற்றில் சைவநெறிக்கூடம் ஊடாக சாம்பல் கரைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனை சாத்தியமாக்க உழைத்த 4 சுவிட்சர்லாந்து நாட்டவர்களுக்கும் தமிழ்மக்கள் சார்பாளர்களால் நேற்று (20.11.2023) நன்றி நவின்று விருந்துவழங்கப்பட்டது.
விருந்திற்கு முன்னர் ஞானலிங்கேச்சுரர் முன்றலில் தமிழ்ப்பண்பாட்டுப்படி மாலை அணிவித்து நால்வரும் மதிப்பளிக்கப்பட்டனர்.
நினைவுப்பரிசாக தமிழர் சிற்றுண்டி அரியதரமும், பயிற்றம்பணியாரமும் அத்துடன் கொக்கோ இனிப்புப்பண்டமும் வழங்கப்பட்டது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர், தூண் பிள்ளையார்கோவில் உறுப்பினர்களும், அக்கினிப்பறவைகள் மன்றத்தின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.
அதிகாரிகளையும் சமையத் தலைவர்களையும் வரவேற்று நன்றி நவின்ற திருநிறை. சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் தனது உரையினை இவ்வாறு ஆற்றினார்:
சுவிட்சர்லாந்து நாட்டிற்கு தமிழர்கள் 80ம் ஆண்டுமுதல் வருகை தரத்தொடங்கி இருந்தனர். சுவிசில் தமிழ் மக்களுக்கு பலதேவைகள் உள்ளன, நாம் அறவழியில் ஒருவகையில் இன்று அடிப்படை உரிமையினை நிலைநிறுத்தி உள்ளோம்.
மதிப்பளிக்கக்கூடியதாக தமிழர் இறுதிச்சடங்கு ஆற்றப்படவும், இறந்தவரின் சாம்பலை சமய நம்பிக்கைக்கு அமைவாக நீரில் கரைப்பதற்கு ஒப்புதல் அளித்த ஊராட்சி மன்றம், பேர்ன் மாநிலம், சுவிட்சர்லாந்து அரசிற்கு நாம் தமிழ்மக்களின் சார்பாளர்களாக உளமார்ந்த நன்றியினை நவில்கின்றோம் என்றார்.
பச்சைக்காய்கறிக்கலவை முதல் உணவாக வழங்கப்பட்டு, இரவு உணவாக ஈழத்தமிழ் முறையில் சோறும் சைவக்கறிகளும், நிறைவாக மாம்பழக்கலவையும் வழங்கப்பட்டு விருந்து கொடுக்கப்பட்டது. உள்ளத்திற்கும் உரிமைக்கும் நிறைவளிக்கும் நிகழ்வாக இவ்விருந்து அமைந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |