உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் புதிய சாகச சுற்றுலாத் திட்டம்
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மத்திய மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், புதிய சாகச சுற்றுலா நிகழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா, நல்லதண்ணி மற்றும் மவுசாகலை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு, நீர் மற்றும் சாகச சுற்றுலா நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
இந்த நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26 மற்றும் 27ஆம் திகதிகளில், நுவரெலியா மாவட்டத்தின் பிரபலமான மோஹினி அருவியை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பல்வேறு கலாசாரங்களின் இணைவு
மத்திய மாகாணத்தில் இயற்கை வளங்கள், வரலாற்று முக்கியத்துவம் மற்றும் பல்வேறு கலாசாரங்களின் இணைவு காணப்படுவதுடன், இதுவரை முழுமையாகப் பயன்படுத்தப்படாத பல சுற்றுலா வளங்களும் காணப்படுகின்றன.
இந்த வளங்களை பொறுப்புடனும் நிலையான முறையிலும் பயன்படுத்தி, பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், சுற்றுலாத்துறையின் ஊடாக புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதுமே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
குறிப்பாக, நொர்வூட் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மவுசாகலை நீர்த்தேக்கம், காமோர், மேரே மற்றும் மோஹினி போன்ற நீர்வீழ்ச்சிகள், அத்துடன் புனித சிவனொளிபாதமலை ஆகியவற்றை மையப்படுத்தி எதிர்காலத்தில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சாகச சுற்றுலா
இதனடிப்படையில், சாகச சுற்றுலாவை ஒரு புதிய சுற்றுலா உற்பத்தியாக அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும் இந்த நிகழ்வு பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் பிரதான நோக்கங்களில் ஒன்றாக நல்லதண்ணி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளின் சுற்றுலா கவர்ச்சியை மேலும் அதிகரிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பிரதேச மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், அவர்களின் வருமான மட்டத்தை உயர்த்துதல், சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவங்களையும் சுற்றுலா உற்பத்திகளையும் அறிமுகப்படுத்துதல் ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகின்றன.
குறிப்பாக, நல்லதண்ணியை ஒரு முக்கிய சுற்றுலா இலக்காக மேலும் நிலைநிறுத்தி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை பிரதேசத்தில் தங்க வைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதும் திட்டத்தின் மற்றுமொரு இலக்காகும்.
