வெடுக்குநாறிமலையில் மீண்டும் புத்தர் சிலை! சந்தபோதி தேரரின் அறிவிப்பு
வெடுக்குநாறிமலை பௌத்த வழிபாட்டுத் தலம் எனவும், அங்கு முன்னர் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும் சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில், சுமார் 25 சிங்கள மக்களுடன் சந்தபோதி தேரர் தலைமையிலான குழுவினர் இன்று (12) காலை சென்றிருந்தனர்.
பௌத்த வழிபாட்டுத் தலம்
அங்கு சென்ற குழுவினர், சூலம் அமைந்திருந்த பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் பிரித் ஓதி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதன்போது, சைவ மக்கள் மலை உச்சிக்கு செல்ல வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சந்தபோதி தேரர், 2012ஆம் ஆண்டுக்கு முன்னர் வெடுக்குநாறிமலையில் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும், அந்த சிலை தற்போது தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், அந்த புத்தர் சிலையை மீண்டும் வெடுக்குநாறிமலையில் நிறுவவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாடு 2013ஆம் ஆண்டுக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டதாகவும், தமிழர்கள் போலியான நம்பிக்கையின் அடிப்படையில் வழிபாடுகளில் ஈடுபடுவதாகவும் சந்தபோதி தேரர் தெரிவித்தார்.




