அமெரிக்காவை அதிர வைத்த 9/11 - 25 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த இரகசியங்கள்
அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 தாக்குதல்களின் 25 வது ஆண்டு நினைவை முன்னிட்டு, ஒசாமா பின்லேடன் மற்றும் அல்-கொய்தா அமைப்பு குறித்து சேகரிக்கப்பட்ட பல டஜன் இரகசிய உளவுத்துறை ஆவணங்களை அமெரிக்க மத்திய புலனாய்வு முகவரகமான சிஐஏ (CIA) பகிரங்கப்படுத்தியுள்ளது.
3,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்குக் காரணமான 9/11 தாக்குதலுக்கு முன்னர், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் உள்ளிட்ட நாட்டின் உயர் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட தினசரி இரகசிய உளவு அறிக்கைகளே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.
இரகசிய ஆவணங்கள்
சிஐஏ இயக்குநர் ஜான் ரட்க்ளிஃப் இதனைத் தனது அமைப்பின் வெளிப்படைத்தன்மைக்கான முக்கிய நகர்வாகக் குறிப்பிட்டுள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் 1998 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றில், பின்லேடனின் முக்கிய இலக்கு அமெரிக்க மண்ணில் உள்ள வொஷிங்டன் நகரைத் தாக்குவதே என்றும், வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட விமானமொன்றை அமெரிக்க நகரம் மீது மோதித் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
அத்துடன், ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்த பின்லேடனை ஒப்படைக்க தலிபான்கள் மறுத்தமை, நியூயோர்க் விமான நிலையத்தில் சந்தேகநபர்கள் மேற்கொண்ட பாதுகாப்புப் சோதனை ஒத்திகைகள் மற்றும் கதிரியக்கப் பொருட்களைப் பயன்படுத்தி குண்டுகளைத் தயாரிக்கும் முயற்சிகள் குறித்த முக்கிய தகவல்களும் இந்த ஆவணங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.