மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் BRICS-ல் வரலாற்று உடன்பாடு
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் மற்றும் உறுப்பு நாடுகளுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும், புதுடெல்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் கூட்டுப் பிரகடனமொன்றை வெளியிடுவதற்கு உறுப்பு நாடுகள் உடன்பாட்டை எட்டியுள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆரம்பமான இந்த மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங், ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மோதல் நிலைமை
மாநாட்டின் தொடக்க உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய தீர்மானங்களை எடுக்கும் தளங்களில் வளரும் நாடுகளுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் மறுசீரமைப்பை இனிமேலும் தாமதிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய உறுப்பு நாடுகளுக்கிடையில் மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பில் முரண்பாடுகள் காணப்பட்ட போதிலும், இந்தியாவின் தீவிர இராஜதந்திர முயற்சிகள் காரணமாகவே இந்த கூட்டுப் பிரகடனத்திற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எந்தவொரு தனிப்பட்ட நாட்டின் பெயரையும் நேரடியாகக் குறிப்பிடாமல், ஒருதரப்பு இராணுவ ஆக்கிரமிப்புகளைக் கண்டிக்கும் வகையில் இந்த கூட்டுப் பிரகடனம் அமையவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், பிரிக்ஸ் அமைப்பின் உலகளாவிய செல்வாக்கை அதிகரிக்கவும் தலைவர்கள் இதன்போது முக்கிய கவனம் செலுத்தியுள்ளனர்.