சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 61 பேர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினரால் கடந்த முதலாம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில், உள்நாட்டுக் கடற்பரப்பை உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத முறையில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 61 நபர்களுடன் 18 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சட்ட நடவடிக்கை
அதன்படி, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளில்; திருகோணமலை பொல்மல்குடா, நீலாக்கேணி, கோணேஸ்வரம், கொக்கனட் பொயிண்ட், பவுல் பொயிண்ட், பிளாக் ஸ்டாப், சல்லிக்கோவில், முல்லைத்தீவு நாயாறு, புதுமாத்தளன், மன்னார் தாழ்வுபாடு, பேசாலை, ஊருமலை, புத்தளம் நுரைச்சோலை மற்றும் கருக்கப்பனை ஆகிய கரையோர மற்றும் கடல் பிரதேசங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கடற்றொழில் படகுகள் மற்றும் தடை செய்யப்பட்ட கடற்றொழில் உபகரணங்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஈச்சிலம்பற்று, கோட்பே, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களிடமும், புல்மோட்டை பொலிஸ் நிலையத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.