600 தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் - நிர்வாகத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட வௌரலி, போட்மோர், மோனிங்டன் மே பிரிவு, மோனிங்டன் கீழ் பிரிவு மற்றும் ஆட்லி ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 600 தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டமானது, இன்று(02.10.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலை நிறுத்தப்போராட்டம்
கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1,700 ரூபாய் சம்பளம் எவ்வித பிரச்சினைகளுமின்றி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை தினங்களில் தொழில் செய்வோருக்கு கைகாசு அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என்றும் தேயிலை கொழுந்து பறிப்புக்கு ஒரு கிலோகிராமுக்கு 90 ரூபாய் என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என்றும் தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நடைமுறை நடைமுறைப்படுத்தப்பட்டால் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 200 ரூபாய் கொடுப்பனவைப் பெறுவதில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் தொழிலாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், தோட்டப் பகுதிகள் முறையாக பராமரிக்கப்படாமல் காடுகளாக காணப்படுவதால், தொழிலாளர்களுக்கு வழக்கமான முறையில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து உரிமைகள் மற்றும் சலுகைகளையும் தோட்ட நிர்வாகம் முறையாக வழங்க வேண்டும் எனக் கோரி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்
இதனிடையே, வௌரலி மற்றும் போட்மோர் தோட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேயிலைத் தொழிற்சாலைக்கு முன்பாக இன்று(02) போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

சுமார் மூன்று மணித்தியாலங்கள் இந்த போராட்டம் இடம்பெற்றதுடன், பின்னர் தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
எனினும், பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் தோட்ட நிர்வாகம் தொடர்ந்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
