வீதி அபிவிருத்தி அதிகார சபை நிதி முறைகேடு: 51 மில்லியன் ரூபா மாயம் - நாமல் குற்றச்சாட்டு
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதி முறைகேடுகளை அரசு குறைத்து மதிப்பிட முயல்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், ஒப்பந்தக்காரர்களுக்குத் தவறுதலாக அனுப்பப்பட்ட தொகையில் 51 மில்லியன் ரூபா இன்னும் கணக்கில் காட்டப்படாமல் மாயமாகவே உள்ளது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் இரட்டை கொடுப்பனவுகள் குறித்த குற்றச்சாட்டுகள் "அடிப்படையற்றவை" என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன அண்மையில் தெரிவித்த கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ச தனது எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
மோசடிகளுக்கு அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்..
நாமல் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“அமைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாக ஒப்பந்தக்காரர்களுக்கு 263 மில்லியன் ரூபா தவறுதலாக அனுப்பப்பட்டதை, இலங்கை வங்கியின் நிதித் திரும்பப் பெறும் அறிவித்தல் மிகத் தெளிவாக உறுதிப்படுத்துகின்றது.
இவ்வாறு தவறுதலாகக் கைமாறிய தொகையில், 51 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை இதுவரை மீளப் பெறப்படவோ அல்லது கணக்கில் காட்டப்படவோ இல்லை.
அத்துடன், ஒப்பந்தக்காரர்களுக்குத் தவறுதலாக அனுப்பப்பட்ட தொகையில் 51 மில்லியன் உள்ளது என உத்தியோகபூர்வ ஆவணங்களே இந்த உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் போது, எந்த அடிப்படையில் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இதனை மறுக்கின்றார்? ”என அவர் பதிவில் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த விவகாரத்தில் அமைதி காப்பதையும், அரசின் மறுப்பு அறிக்கைகளையும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
கடந்த காலங்களில் சர்ச்சை ஏற்படுத்திய "திறைசேரி மின்னஞ்சல் மோசடி" போன்ற விவகாரங்களுடன் இதனைத் தொடர்புபடுத்திய நாமல் ராஜபக்ச, அரசு உண்மைகளை மறைக்க முற்படாமல், நடந்த தவறுக்கு முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறெனினும் மக்களின் வரிப்பணம் முறையாகக் கையாளப்படுகின்றதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.