பருத்தித்துறையில் அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள் : 4 வயது சிறுவன் உட்பட மூவர் வைத்தியசாலையில்..
பருத்தித்துறை - தும்பளை வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் நான்கு மோட்டார் சைக்கிள்களும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவருடன் பயணித்த தாய் மற்றும் தந்தையாரும் காயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை - தும்பளை வீதியில் மணியாரம் சந்திக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
4 வயது சிறுவன் படுகாயம்
இதன்போது, பருத்தித்துறையிலிருந்து தும்பளை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், பருத்தித்துறை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் வீதியில் தூக்கி வீசப்பட்ட நிலையில், பின்னால் மிக நெருக்கமாகப் பயணித்த ஏனைய மூன்று மோட்டார் சைக்கிள்களும் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளுடன் அடுத்தடுத்து மோதியுள்ளன.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பத்தினர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், 4 வயது சிறுவன் பலத்த காயமடைந்த நிலையில், அவரது தாய் மற்றும் தந்தையாரும் காயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முச்சக்கர வண்டி சாரதி கைது
கரவெட்டி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு விபத்தில் காயமடைந்துள்ளனர். அருகருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பயணித்த நிலையில், அவற்றை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மிக நெருக்கமாக நான்கு மோட்டார் சைக்கிள்கள் வீதியை ஆக்கிரமித்துப் பயணித்தமையும், அதிக ஒளிர்திறன் கொண்ட முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு பயணித்தமையுமே விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறைப் பொலிஸார், விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டியின் சாரதியைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, பருத்தித்துறை மெத்தக்கடை சந்தியிலிருந்து மணியாரம் சந்தி வரையான தும்பளை வீதி மிகவும் குறுகலாகக் காணப்படுவதுடன், பருத்தித்துறை - பொற்பதி அரச பேருந்து சேவை உள்ளிட்ட கனரக வாகனங்களும் அதிகளவில் பயணித்து வருகின்றமையால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகப் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தப் பகுதியில் விபத்து அபாயம் காணப்படுவது தொடர்பில் பல தடவைகள் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் இதுபோன்ற கோர விபத்துகள் இந்தப் பகுதியில் அடிக்கடி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.