காதலியை கொடூரமாக கொலை செய்து உயிரை மாய்த்த காதலன் - பின்னணி குறித்து பொலிஸார் தகவல்
அம்பாறை, பதியதலாவ காதலியின் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டமை தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
மரங்கல பகுதியில் நேற்று அதிகாலை வீட்டிற்குள் நுழைந்த இளைஞன் வீட்டில் இருந்த தனது 22 வயது காதலியின் கழுத்தை அறுத்து, அவரது தாயையும் தந்தையையும் பலத்த காயப்படுத்தி, பின்னர் தனது கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
பெண் தனது மூன்று வருட உறவை முறித்துக் கொண்டதால் கோபமடைந்த காதலன் இந்தக் குற்றத்தைச் செய்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காதல் தோல்வி..
காதலனால் கத்தியால் குத்தப்பட்டவர் 22 வயதுடைய டி.எம். சரோஜா உதயங்கனி என தெரியவந்துள்ளது. மேலும் தாக்குதலுக்குள்ளான 62 வயதுடைய தந்தை மற்றும் 60 வயதுடைய தாயார், மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணான சரோஜா, மொனராகலையை சேர்ந்த இளைஞனுடன் சுமார் மூன்று ஆண்டுகளாக காதல் உறவில் இருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த இளைஞன் சரோஜாவுக்கு பணம் மற்றும் பல்வேறு வழிகளில் உதவி செய்து, அவரை திருமணம் செய்து கொள்ள எதிர்பார்த்திருந்ததாக தெரியவந்துள்ளது.
எனினும் சில காலத்திற்கு முன்பு, சரோஜா அந்த இளைஞனுடன் கொண்டிருந்த காதல் உறவை நிறுத்தியுள்ளார். அவருடைய பெற்றோரும் அந்த இளைஞனை எதிர்த்தனர். இதன் காரணமாக, அந்த இளைஞன் சரோஜா மீதும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும் கடும் வெறுப்பைக் கொண்டிருந்தார்.
இளைஞனின் மிரட்டல் காரணமாக சரோஜாவுக்கு கொழும்பில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றிருந்தார். இந்த நிலையில் சரோஜா வேறொரு இளைஞனுடன் புதிய காதல் உறவைத் ஏற்படுத்தியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சரோஜா 3 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் பதியதலாவாவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியிருந்தார். தனது காதலி வீடு திரும்பியதை அறிந்த இளைஞன், நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
சரோஜா அதிகாலை 2.30 மணியளவில் கொழும்புக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், கூர்மையான ஆயுதத்துடன் இளைஞன், முதலில் வீட்டிற்குள் நுழைந்து சரோஜாவின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த அவரது பெற்றோரை கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இளைஞனால் கத்தியால் குத்தப்பட்ட இளம் பெண், வீட்டை விட்டு வெளியே ஓடி உறவினர் வீட்டிற்குச் சென்று அங்கு உயிரிழந்துள்ளார். வீட்டை விட்டு தப்பிச் சென்ற இளைஞன், கூர்மையான ஆயுதத்தால் தனது கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
மொனராகலையில் இருந்து தனது காதலியின் வீட்டிற்கு அந்த இளைஞன் வந்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




