22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதில் ஜனாதிபதியின் கருத்தில் எந்த முரண்பாடும் இல்லை : சுனில் ஹந்துன்நெத்தி
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை விரைவாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டதில் எந்த முரண்பாடும் இல்லை என்று அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
களுத்துறை, புளத்சிங்கள பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரை தொடர்பில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
22 தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அரசமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அவசியமானவை என்பதால், அதனை நாடாளுமன்றத்தில் விரைவாகச் சமர்ப்பித்து நிறைவேற்றுவதாகவே ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஒருவேளை உயர்நீதிமன்றம் இந்தச் சட்டமூலத்துக்குச் சர்வஜன வாக்கெடுப்பு (மக்கள் தீர்ப்பு) அவசியம் என உத்தரவிட்டால், அதனை எதிர்கொள்வதிலும் அரசுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

இதற்கிடையில், அரசின் இந்தத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட மற்றும் அரசியல் ரீதியிலான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காகச் சுதந்திர செயற்பாட்டு மையம், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடன் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதில் அரசின் சார்பில் திட்டமிட்ட தாமதம் எதுவும் இல்லை. சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறைகளில் ஏற்படும் இயல்பான நடைமுறைத் தாமதங்களே இதற்குக் காரணம். இது நீண்டகால யுத்தம், பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய பரந்த விடயமாகும்.

மேலும், அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு நேரடியாகத் தொடர்புடையது என்பதால், அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டியுள்ளது.
சந்தேகநபர்களைக் கைது செய்வது தொடர்பான பொலிஸாரின் நடைமுறை விளக்கங்களும் சட்ட வரையறைகளும் சிக்கலானதாக அமைந்திருப்பதும் தாமதத்துக்கு மற்றொரு காரணமாகும்.
எவ்வாறாயினும், அரசு அளித்த வாக்குறுதியின்படி, பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற்று நாட்டின் அனைத்துத் தரப்பினருக்கும் நீதி கிடைக்கும் வகையில் மிக விரைவில் இதற்கான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஆயுத மோதல் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை : ஜெனிவாக் கூட்டத் தொடரில் விசனம்
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24