தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய ஐ.நா. அறிக்கையை வரவேற்ற சுமந்திரன்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்ப அமர்வில் இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை வரவேற்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மா.ஆ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவித்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்ட தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் வரவேற்பு
அத்துடன், மாகாண சபைத் தேர்தல்கள் நீண்ட காலமாக நடத்தப்படாமல் இருப்பது தொடர்பில் ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளதையும் அவதானித்துள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலஞ்சம், ஊழல் மற்றும் போதைப்பொருள் தொடர்புடைய பாதாள உலகக் குழுக்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை வரவேற்பதாக கூறிய அவர், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படாதது குறித்து கடும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.