நீதிபதிக்கு இலஞ்சம் கொடுத்த நீதிமன்ற ஊழியர்! சரண குணவர்தன வழக்கில் ஏற்பட்ட திருப்பம்...
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இலஞ்ச -ஊழல் வழக்கில்,ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு உதவி செய்வதாக கூறி ரூ. 750,000 இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் கொழும்பு மேல் நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவர், இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவினால் நேற்று (08.09.2026) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாமலின் எயார்பஸ் ஊழலில் தொடர்புப்பட்ட இருவரின் மர்ம மரணங்கள்! நான்கு மரணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய சர்ச்சை
எவ்வாறு இலஞ்சம் கொடுக்கப்பட்டது
மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சரண குணவர்தனவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் தற்போது மீண்டும் விசாரிக்கப்பட்டு வரும் "மாதிவெல வீடுகள்" ஊழல் வழக்கே இந்த இலஞ்சக் கொடுக்கல் வாங்கலுக்குப் பின்னணியாக அமைந்துள்ளது.
இந்த பணப் பரிவர்த்தனை தொடர்பான முக்கியமான டிஜிட்டல் சான்றுகளும் புலனாய்வாளர்களிடம் உள்ளதாக தெரியவந்துள்ளது. வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பரிமாறப்பட்ட செய்திகள் மற்றும் பணச் செலுத்தல்களை உறுதிப்படுத்தும் ரசீதுகளும் அடங்குவதாக கூறுகின்றனர்.
இங்கு மிக முக்கியமான விடயம் என்னவெனில், வழக்கினை விசாரணை செய்யும் மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல இந்த இலஞ்சக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புப் பட்டுள்ளாரா என்பதில் இதுவரை எந்தவொரு சான்றும் வெளிவரவில்லை. இச்சம்பவம் குறித்து நீதிபதியே முறைப்பாடு செய்துள்ளார்.
வழக்கின் பின்னணி
2006-2007 காலப்பகுதியில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றியபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பானது.
மாதிவெலவில் அமைந்துள்ள வீடு ஒன்றை அபிவிருத்தி லொத்தர் சபைக்கு வாடகைக்கு எடுக்கும் போது, அதன் உரிமையாளருக்கு ரூ. 1,980,000 (19.8 இலட்சம்) குத்தகை முன்பணத்தை சட்டவிரோதமாக விடுவிக்க சபையின் அதிகாரிகளைத் தூண்டியதன் மூலம் சரண குணவர்தன இலஞ்ச சட்டத்தின் 70வது பிரிவின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 2022 இல் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
முறைப்பாட்டாளரின் சாட்சியங்களின்படி, அந்த வீடு சரண குணவர்தனவின் முன்னாள் மனைவியான குமாரி அபேவிக்ரம என்பவருக்குச் சொந்தமானது என்றும், பின்னர் அது வேறொருவருக்கு மாற்றப்பட்டு, அவரிடமிருந்து அபிவிருத்தி லொத்தரை் சபைக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2026 ஜூன் 9 அன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால், நான்கு தனித்தனி வழக்குகளில் சரண குணவர்தனவைக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்தார்.
18 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட அவருக்குப் பெயரளவில் 72 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவை ஒவ்வொரு வழக்கிற்குள்ளும் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தண்டனை 16 ஆண்டுகளாக மாறியது.
ரூ. 1.8 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பிற்கு எதிராக சரண குணவர்தன 2026 ஜூலை 1 அன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு தனித்தனி மேன்முறையீடுகளைத் தாக்கல் செய்துள்ளார்.