20ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் பிரேரணை தொடர்பாக கட்சித் தலைவர்களின் கூட்டம்
நாடாளுமன்றத்தில் இன்று (18) நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டம் மிக முக்கியமான ஒன்றாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்குக் காரணம் 20ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
இதன் காரணமாக வழமையான கட்சித் தலைமைக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கு ஆளுங்கட்சி அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டமானது இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்கும் 20வது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைமைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் எனத் தெரியவருகிறது.
இந்த தீர்மானத்தை நாடா ளுமன்றத்தில் சமர்ப்பித்து எதிர்காலத்தில் நிறைவேற்றவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு நாடாளுமன்றம் மற்றும் பிரதமருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படும்.
2015 ஆம் ஆண்டு அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் 19 ஆவது திருத்தத்தை கொண்டு வந்து ஜனாதிபதியின் அதிகாரங்களை கடுமையாக குறைத்து நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை அதிகரித்தது.
ஆனால் 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் மீண்டும் ஜனாதிபதி பதவியை பலப்படுத்த 20 வது திருத்தம் மூலம் நடவடிக்கை எடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.