சிறையிலிருந்து நாமல் ஆதரவாளர்களுக்கு விடுத்துள்ள செய்தி
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆதரவாளர்களுக்கு விசேட செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற கட்சியின் "ஜன சதன" பேரணியில் கலந்துகொண்டுள்ள ஆதரவாளர்களுக்கு அவர் இவ்வாறு செய்தி அனுப்பி வைத்துள்ளார்.
அரசியல் அழுத்தங்கள்
அரசாங்கத்தின் அரசியல் அழுத்தங்களுக்குத் தாம் ஒருபோதும் பணியப்போவதில்லை என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அனுப்பப்பட்டுள்ள இந்தச் செய்தியில், தமது ஆதரவாளர்களின் ஒற்றுமை மற்றும் ஆதரவுக்கு நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன் அநுராதபுர பேரணியானது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அரசியல் பயணத்தில் ஒரு "தீர்மானமிக்க புதிய தொடக்கம்" என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
"கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து நான் உங்களைப் பார்க்கிறேன். இங்கிருந்து, நீங்கள் எனக்குக் காட்டும் சகோதரத்துவத்தின் கதகதப்பை என்னால் உணர முடிகிறது" என்று நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடுமையான விமர்சனம்
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின், "கடினமான சூழ்நிலைகள் சில மனிதர்களை உடைத்தெறிகின்றன; ஆனால் சிலரை உருவாக்குகின்றன" என்ற வார்த்தைகளை நாமல் மேற்கோள் காட்டியுள்ளார்.
சவால்கள் தமது அரசியல் இயக்கத்தைப் பலப்படுத்தியுள்ளதாகவும், துன்பங்களை எதிர்கொள்ளும்போது மேலும் பலமடைவதற்குக் கற்றுக்கொடுத்தவர் தனது தந்தை என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், வாழ்க்கைச் செலவு மற்றும் வரிச் சுமையினால் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் அரச விசாரணை நிறுவனங்களை அரசியல்மயமாக்குவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமாக விசாரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆதரவாளர்களுக்கு கோரிக்கை
அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், மாகாண சபை தேர்தல்கள் தாமதமடைவது மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையில் நுழையும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் இல்லாமை குறித்தும் அவர் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமது செய்தியின் நிறைவில், அரசாங்கத்தின் "அரசியல் அதிகாரத்திற்கு" தாம் சரணடையப் போவதில்லை என்றும், தாம் அஞ்சப்போவதில்லை என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
"எமது மன உறுதியை சிறைவைக்க முடியாது" எனக் குறிப்பிட்ட அவர், சட்டத்திற்கு மதிப்பளித்து, அமைதியாகவும் ஒழுக்கத்துடனும் செயற்படுமாறு ஆதரவாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது இடம்பெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.